ஆனால், சில பிரச்னைகளால் இத்திரைப்படம் ரிலீஸாகாமல் தாமதமானது. தற்போது 12 வருட இடைவெளிக்குப் பிறகு `மதகஜராஜா’ வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தில் விஷால் பாடிய பாடல், சந்தானத்தின் காமெடி போன்ற விஷயங்களும் படத்தின் மைலேஜை கூட்டி எதிர்பார்ப்பையும் அப்போதே ஏற்படுத்தியது. கடந்த வாரம் இத்திரைப்படம் வெளியாவதாக அறிவிப்பு வெளியானதும் சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக பதிவிட்டனர். நேற்றைய தினம் இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னை லீலா பேலஸில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில், விஷாலின் தோற்றம் பலரையும் அதிர்ச்சியாக்கியது.

அதுமட்டுமல்ல, மேடையில் பேசும்போது மைக் பிடிக்க முடியாமல் நடுக்கத்துடன் காணப்பட்டார் விஷால். பிறகு, அவரை படக்குழுவினரோடு மேடையில் தொகுப்பாளார் டி. டி அமர வைத்தார். அவருக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாகவும் தொகுப்பாளர் தெரிவித்தார். சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் விஷாலின் உடல்நிலை குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டு வந்தது. இன்று அப்போலோ மருத்துவமனை விஷாலின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “விஷால் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு முழுமையாக ஓய்வெடுக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.” எனப் குறிப்பிட்டிருக்கிறார்கள்.