எம்.ஜி.ஆர் ரெபரன்ஸோடு அரசியல் சாட்டையை விஜய் சுழற்றவிருக்கிறார் என்பதை போஸ்டர் மூலமே கடத்திவிட்டார்கள். ஆனால், விஜய் அரசியல் நெடி வீசும் படங்களில் நடிப்பதோ எம்.ஜி.ஆரோடு தன்னை இணைத்துப் பேச வைப்பதோ இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பல முறை இப்படி நடந்திருக்கிறது. விஜய் எம்.ஜி.ஆரை கையிலெடுப்பதன் பின்னணி என்ன?

நாளைய தீர்ப்பு:
அரசியலுக்கு வந்துவிட்டதால் கடைசிப்படமாக இந்தப் படத்தில்தான் நடிக்கிறேன் என விஜய் அறிவித்துவிட்டதால், இந்தப் படம் கட்டாயம் ஏதோ அரசியல் சம்பந்தமான அம்சங்களை உள்ளடக்கிய படமாகத்தான் இருக்குமென கணிக்கப்பட்டது. அதன்படி, படத்திற்கு ‘நாளைய தீர்ப்பு’ எனப் பெயர் வைக்க பரிசீலித்து வருகிறார்கள் என்றும் பேசப்பட்டது. நாளைய தீர்ப்பு விஜய்யின் முதல் படம். அது அவரின் தந்தை எஸ்.ஏ.சியே இயக்கியிருந்த படம். அதிலேயே நிறைய அரசியல் குறியீடுகளை எஸ்.ஏ.சி வைத்திருப்பார். படத்தில் விஜய்யின் வீட்டு வாசல் சுவற்றில் ஒரு பக்கம் இரட்டை இலையும் ஒரு பக்கம் உதயசூரியனும் வரையப்பட்டிருக்கும். விஜய்யின் ஓப்பனிங் பாடலிலும் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என எல்லா கட்சிகளின் ஆளுமைகளையும் கலந்துகட்டி புகழும் வகையில் இடம்பெற்றிருக்கும். திமுக அனுதாபி எனச் சொல்லப்பட்ட எஸ்.ஏ.சி தன்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும்போது அவரை பொதுவானவராக காட்டிக்கொள்ள செய்த வேலையாக அது பார்க்கப்பட்டது.