Vibe of 2024:  `ராஜா, ரஹ்மான், அனி, ஷான் ரோல்டன்' - அதிகம் வைப் செய்த பாடல்கள்

Vibe of 2024: `ராஜா, ரஹ்மான், அனி, ஷான் ரோல்டன்' – அதிகம் வைப் செய்த பாடல்கள்


மியூசிக் இல்லாமல் நமக்கெல்லாம் ஒரு நாளும் நகர்வதில்லை. Spotify, வின்க் மியூசிக், கானா என பல மியூசிக் ஆப்களைப் பயன்படுத்தி தினமும் பாடல்களைக் கேட்கிறோம்.

சில நேரங்களில் நாமும் நம் பக்கத்து வீட்டுக்காரரும் ஒரே பாடலைக் கேட்டுக்கொண்டிருப்போம், அதே நேரம் அடுத்த வீட்டுக்காரரும், அடுத்த தெருக்காரரும், அடுத்த ஊர்காரரும் என சமூகமாகவே ஒரு பாடலுக்கு வைப் செய்வோம். இப்படி நம்மை வைப் செய்ய வைப்பதில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பங்கும் அதிகம்.

இந்த ஆண்டு வெளியாகி நம்மையெல்லாம் வைப் செய்ய வைத்த பாடல்களைப் பற்றிதான் இந்தப் பதிவில் பார்க்கவிருக்கிறோம். 2024க்கு குட் பை சொல்ல இதைவிட நல்ல முறையிருக்க முடியுமா என்ன?

வைப் மாஸ்டர் என தமிழ் சினிமாவில் ஒருவரை அழைக்க வேண்டுமென்றால் அது அனிருத்தைத்தான். கடந்த ஆண்டு `லியோ’ பாடல்களுக்கு நம் கால்களை தானாக ஆட வைத்த அனி, இந்த ஆண்டு ‘மனசில்லாயோ’ என மலையாளம் கலந்த குத்துப் பாடலுடன் தோல்களைக் குலுக்க வைத்துள்ளார். `வேட்டையன்’ படத்தின் ‘ஹன்ட்டர் வண்டார்’ பாடலும் தீம் மியூசிக்கும் `தேவரா’வின் ‘ஃபியர் சாங்’கும், இந்தியன் தாத்தாவின் ‘பாரா’வும் நம்மை முறுக்கேற்றின. லேட்டஸ்ட்டாக கூலியின் ‘சிட்டுக்கு வைப்’ என நம் பாத்ரூம் நடன பசிக்கு விருந்தளித்தார் அனி. ‘சுட்ட மல்லே’ பாடலுக்கு ரீல்ஸ் செய்த மதுரை மல்லிகளை அந்த ஒரு நிமிடம் ஜான்வி கபூராகவே மாற்றியது அனியின் இசைதானே. 2 கே கிட்ஸின் இளம் மனதை ‘தீமா தீமா’ என வருடி விட்டிருக்கிறார். அண்டர்டேக்கரின் WrestleMania கரியர் போல அனியின் ஸ்ட்ரீக் அடுத்த ஆண்டும் தொடரும் என்பதை வெத்தலையில் மை வைக்காமலேயே கண்கூடாகக் கான முடிகிறது.

‘அ’ வரிசை என்பதாலேயே அனியில் தொடங்கினேன். மற்றபடி, இந்த ஆண்டு ஜீ.வியின் ஆண்டாகத்தான் அமைந்தது. ‘killer killer captain miller’ என மாஸாக என்ட்ரி கொடுத்தார் ஜீ.வி. ‘உன் ஒளியிலே’, ‘நேற்று வரை’ என ஹிட் பாடல்கள் வந்தாலும் மேலே சொன்ன ‘வைப்’ என்ற அடைமொழிக்கு பொருத்தமான சாங்ஸ் தங்கலானிலிருந்து தொடங்கியது. ‘மினுக்கி மினுக்கி’ என மங்கைகளை ஆட வைத்தும் `தன்னே தன்னானே தானே நன்னானே’ என பாட வைத்தும் வசியம் செய்திருந்தார். `வருணம் வலு உடையும்’ என்ற ‘போர் பாடல்’ எல்லாரது ஜிம் பிளே லிஸ்டிலும் இடம் பெற்றது. அடுத்ததாக வந்த `அமரன்’ படத்தில் சாய் பல்லவி நளினத்துடன் போட்டிப்போடும் ஒரு நிமிட தீம் ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை கிராஷ் ஆக்கினார். இன்றும் அந்த வையலின் இசை ட்ரெண்டிங்கில் உள்ளது. ‘மின்னலே’, ‘வெண்ணிலவு சாரல்’, ‘உயிரே’ என எல்லாமும் ஹிட். ஒரு பாடல் என்றில்லாமல் ஒரு ஆல்பமையே நாம் சுற்றி சுற்றி வைப் செய்துகொண்டிருந்தோம். அடுத்த ஆண்டும் இசையமைப்பாளர் ஜP.விக்கு உகந்ததாக இருக்கும் என்பதற்கு சாம்பிளாக, ‘கோல்டன் ஸ்பாரோ’, ‘காதல் ஃபெயில்’ பாடல்கள் வந்திருக்கின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் சௌத் இந்தியா இசையமைப்பாளராக உருவாகியிருக்கும் சந்தோஷ் நாராயணன் பாடல்களில் வைப் சாங்ஸுக்கு தனி ரசிகர் படை உள்ளது. `கல்கி 2898 ஏ.டி’ படத்தின் மியூசிக்குகள் பரவலாக பேசப்பட்டது. குறிப்பாக ‘புஜ்ஜி தீம் மியூசிக்’ ஸ்பீக்கர் இல்லாமல், பிளேயர் இல்லாமல் மூளைக்குள் புகுந்து நான் ஸ்டாப்பாக ஒலித்துக்கொண்டிருந்தது. ஆக்‌ஷன் படங்கள், த்ரில்லர்கள், சயின்ஸ் ஃபிக்‌ஷன் என ஒருபக்கம் ஸ்கோர் செய்துகொண்டிருந்த சந்தோஷ் நாராயணன் கிராமத்துக்குள் இறங்கி கண்ணீரையும் சிரிப்பையும் உழைப்பையும் ஹைலைட் செய்த ஆல்பம் `வாழை’. ‘தென்கிழக்கு’, ‘ஒத்த சட்டி சோறு’, ‘ஒரு ஊருல ராஜா’, ‘பாதவத்தி’ என ஆல்பம் ஹிட் கொடுத்தார்.

வைப் என்ற சொல் பயன்பாட்டுக்கு வரும்முன்னே அதற்கு இலக்கணம் வகுத்துக்கொடுத்தவர் பெரிய புயல். அவர் இல்லாமல் எப்படி? `ராயன்’ படத்தின் ‘அடங்காத அசுரனு’க்கும், ‘வாட்டர் பாக்கெட்டு’க்கும் வைப் செய்யாத 2கே கிட்ஸைக் கண்டுபிடிப்பது கடினம். ‘ஓ ராயா…’ நம் மனதுக்குள் புகுந்து உதடுகளை முனுமுனுக்க வைத்தது பெரிய பாய்யின் கெரியரில் ஒரு சாதாரண சம்பவம். வழக்கம் போல ஹம்ம ஹம்மாவில் தொடங்கி, பல 90’ஸ் இந்தி மற்றும் தமிழ் பாடல்கள் ரீல்ஸ்களாக வலம்வந்தன.

ஆடு ஜீவிதம் படத்தின் மூலம் சர்வதேச இசையமைப்பாளர்களுக்கு சவால் விடுபவர், ‘என்னை இழுக்குதடி’ என பார்டி வைப் பாடல்களிலும் குறை வைப்பதில்லை.

கோட் படத்தின் மூலம் யுவன் – விஜய் காம்போ மீண்டும் நிறைவேறியது. சின்னக் குழந்தைகள் கூட வைப் செய்து நடனமாட ‘விசில் போடு’, விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக `மரண மட்ட’ என வைப் பாடல்களைக் கொடுத்தார் யுவன். ஸ்டார் படத்தின் ‘விண்டேஜ் லவ்’ பாடல் வைபுக்கும், ‘ஹார்மோனி ஆஃப் ஹார்ட்ஸ்’ இசை மனதின் அமைதிக்குமாக அமைந்தது.

`லவ்வர்’, `ரகு தாத்தா’, `லப்பர் பந்து’ படங்களில் இன்ஸ்டாகிராம் தலைமுறையின் இளையராஜாவாக மாறிவருகிறார் ரோல்டன். ‘தேன் சுடரே’, ‘உசுர உருவி’, ‘உயிர் சுவாசமே’, ‘எழுதா கதையோ’, ‘ஆப்பிள் க்ரம்பல்’ என 2கே கிட்ஸின் அனைத்து லவ் மோடுக்கும் ஒரே ஆல்பத்தில் பாடல்களைக் கொடுத்துள்ளார் ஷான் ரோல்டன். 90’ஸ் கிட்ஸையும் விட மாட்டேன் என அடித்து கொடுத்த ஆல்பம்தான் லப்பர் பந்து. ‘ஆச உறவே’, ‘சில்லாஞ்சிறுக்கியே’ பாடல்கள்தான் இந்த ஆண்டு ரீல்ஸ் கப்புள்களுக்கு தீனி போட்டது. ‘அருகே வா’ பாடல் வித்தியாசமான ஃபியூஷன் இசை…

ஒரு இசையமைப்பாளரை புகழக் கூட இவர் பெயரைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இசைக்காட்டில் ராஜாதி ராஜா ஒருவர்தான். லப்பர் பந்து படத்தைன் வேறலெவலுக்கு தூக்கி விட்டது, 35 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இசையமைத்த ‘பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல்தான். இசைஞானி இந்த ஆண்டின் இறுதியில் `விடுதலை 2′ படத்தின் மூலம் தரமான சம்பவம் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘தினந்தினமும் ஓன் நினைப்பு’, ‘மனசுல மனசுல ஒரு மாதிரியா இருக்கு’ பாடல்கள் மூலம் டிசம்பர் பனிக்கிடையே நம்மை காதல் மழையில் நனைக்கிறார். ‘பொருத்தது போதும் பொங்கி எழு’ பாடல் ரத்தத்தை சூடேற்றுகிறது. `ஜமா’ படத்திற்கு பாடல்களாலும் பின்னணி இசையாலும் ராஜ கம்பீரம் சேர்த்தார். ‘நீ இருக்கும் உசரத்துக்கு’, `தினம் தினமும்’ பாடல்களில் அவரது கவிதைகளும் நம் மனதின் அரியாசனத்தில் இடம்பெற்றிருக்கொள்கின்றன. ‘கண்மனி அன்போடு காதலன்’ என்ற குணா படத்தின் பாடலை நேற்று பிறந்த குழந்தைகூட ரசிக்க வைத்தது மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம். 2கே கிட்ஸ் அவர்களின் தனி உலகில், ” இத்தனை நாள் எங்கடா இருந்தாரு இந்த இளையராஜா” எனப் பேசத்தொடங்கியது தனிக்கதை.

ரியோ ராஜ் நடித்த ஜோ படத்தின் சித்துகுமார் இசையில் ‘உருகி உருகி’, ‘கோவை குளிரா’, அரண்மனை படத்தின் ‘அச்சச்சோ’, கடைசி உலகப் போர் படத்தின் ‘பூம் பிளாஸ்டிக்’, மெய்யழகனின் ‘டெல்டா கல்யாணம்’, ‘யாரோ இவன் யாரோ’, கோவிந்த் வசந்தாவின் மற்றொரு படமான ப்ளூஸ்டாரில் ‘அரக்கோணம்’, ‘ரயிலின் ஒலிகள்’, ஒன்ஸ் மோர் படத்தின் ‘மிஸ் ஒருத்தி’ என பல வைப் பாடல்கள் வந்துசென்றன.

சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல் இண்டிபெண்டன்ட் பாடல்களும் இந்த ஆண்டு நமக்கு மழையாகத்தான் கொட்டின. ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ என காதல் நடனம் புரியவைத்தன சாய் அபியங்கரின் பாடல்கள். இப்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ், சூர்யா 45 என பெரிய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் சாய்.

‘காத்து மேல காத்து கீழ’ என இண்டிபெண்டன்ட் ஆட்டம் காட்டிய பால் டப்பா, சினிமா பாடல்களிலும் கலக்கி வருகிறார். பிரதர் படத்தில் அவரது ‘மக்காமிஷி’ பாடல் இன்ஸ்டா ஹிட். `வேட்டையன்’ படத்தில் தோன்றிய பிக் பாஸ் பிரபலம் யார் எனக் கேட்டவர்களுக்காக “யார்ரா இந்த பையன், நாந்தான் அந்த பையன்” ராப் பதிலளித்துள்ளார் அசல் கோளார். இவரது ரசிகர் படையில் புதியாக இணைந்தவர்கள் ‘416’ல் தொடங்கி ‘பையா டேய்’ வரை ஒவ்வொன்றையும் கேட்டுப் பரவசமடைந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு 14 பாடல்களை ஒரே ஆல்பமாக தெருக்குரல் அறிவு வெளியிட்டுள்ள ‘வல்லியம்மா பேரான்டி’ தமிழ் இண்டிபெண்டன்ட் இசையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த கச்சிதமான ஆல்பம். டைமண்ட் பேபி, கங்காணி, ராசாத்தி, தொடாத, பிளாக் பண்ணிட்டேன் என அட்டகாசமான பாடல்கள் அந்தத் தொகுப்பில் உள்ளன!

காற்றுக்கும் இசைக்கும் எல்லையில்லை, நம் வைபுக்கும் தானே… அதுவும் இன்ஸ்டாகிராம் தலைமுறைக்கு சொல்லவா வேண்டும். ட்ரெண்டாகும் பாடல் எந்த மொழியாக இருந்தால் என்ன, யார் ஆர்டிஸ்டாக இருந்தால் என்ன உடனடியாக ரீல்ஸ் போட்டு வைப் செய்யும் தலைமுறை இது. அப்படித்தான் இந்த ஆண்டு பிரேமலு படத்தின் ‘வெல்கம் டு ஹைத்ராபாத்’, ஆவேஷம் படத்தின் ‘இல்லுமினாட்டி’, புஷ்பாவின் ‘சூடான தீ கங்கு மாதிரி’, லபடா லேடிஸ் படத்தின் ‘சஜ்னி’, சம்கிலா படத்தின் ‘விடா கரோ’, பேட் நியூஸ் படத்தின் ‘Tauba Tauba’, ஹீரா மண்டி வெப் சீரிஸின் ‘சயான் ஹட்டோ ஜாவோ’ எனப் பல பிற மொழி பாடல்களையும் நாம் ரசித்திருக்கிறோம்.

எப்படி பாடல்களைத் தேடிக் கேட்பது சுகமோ அதற்கு இணையானதே நல்ல பாடலை மிஸ் செய்யும் வேதனையும். நான் வைப் செய்ய மிஸ் செய்ததாக நீங்கள் நினைக்கும் பாடலை கமென்ட்டில் சொல்லுங்கள்!



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *