இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாட்டல் ராதா’.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது. இவ்விழாவில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், மிஷ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இப்படம் மது போதைக்கு அடிமையாதல் குறித்துப் பேசுகிறது. இதில் மது போதைக்கு அடிமையாதல் குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் வெற்றிமாறன், “நான் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தேன். இப்போது அதை முழுமையாக விட்டுவிட்டேன். மதுபோதைப் பழக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. முன்பெல்லாம் வீட்டிற்கு இருக்கும் நான்கு பேர்களில், ஒருவர்தான் குடிப்பவராக இருப்பார்.
இப்போது வீட்டில் ஒருவர் குடிப்பழக்கம் இல்லாதவர்களாக இருந்தாலே அதிசயமாக இருக்கிறது. குடிப்பழக்கம் அதிமாகியிருக்கிறது. இது பெரும் சமூகப் பிரச்னையும் கூட. இந்தப்படம் குடிபோதைக்கு அடிமையானவரின் வாழ்க்கையைப் பேசுகிறது. போதைக்கு அடிமையாகியிருப்பவர்களின் குடும்பம், அவரைச் சுற்றி இருப்பவர்கள் என்னென்ன பாதிப்பிற்கெல்லாம் உள்ளாகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுகிறது இப்படம்.

அதிகமாக செல்போன் பார்ப்பதும், சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதும் ஒரு வித டிஜிட்டல் அடிமைத்தனம்தான். மது போதைக்கு அடிமையானவர் வழியே சமூகப் பிரச்னைகளையும் இப்படம் பேசியிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.