விக்ரம் நடிப்பில் இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் இன்று `வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியாகவிருந்தது. ஆனால், `பி4யூ’ நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான `எச்.ஆர் பிக்சர்ஸ்’ நிறுவனத்துக்கு பி4யூ நிறுவனம் பைனான்ஸ் செய்திருக்கிறது. அதற்காக, படத்தின் ஓ.டி.டி உரிமத்தை இந்த `பி4யூ’ நிறுவனத்துக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஓ.டி.டி உரிமம் விற்கப்படுவதற்கு முன்பே திரைப்படம் வெளியாவதால் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை விற்பதில் சிக்கல் எழுந்திருப்பதாகக் கூறி இந்த `பி4யூ’ நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
விதிக்கப்பட்ட தடை
நேற்று இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட இடைகால தடை விதித்திருந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இன்று `வீர தீர சூரன்’ படக்குழு உடனடியாக 7 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் படத்தின் ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியது.
அதனை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது `எச்.ஆர் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தில் முதலீடு செய்த `பி4யூ’ நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்னைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் `வீர தீர சூரன்’ படத்தை வெளியிட தடையில்லை என உத்தரவிட்டிருக்கிறது.
இன்று மாலை காட்சியிலிருந்து திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தடை நீங்கிய தீர்ப்பு வந்ததுக்குப் பிறகு இயக்குநர் அருண்குமார், “ `வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று மாலை திரையரங்குகளில் வெளியாகிறது. காலையிலிருந்து என்னுடைய தந்தை மூன்று முறை திரையரங்கிற்குச் சென்று படம் வெளியாகவில்லை என்பதை அறிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார்.

இதன் மூலம் சீயான் விக்ரம் ரசிகர்களும், பொதுமக்களும் எவ்வளவு இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவர்களிடம் உளமார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறி இருக்கிறார்.