சீனாவின் சிறந்த சுற்றுலா (டியான்சி மலை சுற்றுலா!)தலங்களில் ஒன்றாக டியான்சி மலை விளங்குகிறது. சீன நாட்டின் ஹூணான் மாகாணத்தில் உள்ள வுலிங்யூன் மாவட்டத்தில், ஷாங்ஜியாஜி நகரில், டியான்சி மலை அமைந்துள்ளது. இதன் அருகில் க்சோக்ஷியு பள்ளத்தாக்கும் உள்ளது.

டியான்ஷி என்றால் ’சொர்க்கத்தின் மகன் ’(Son of Heaven) என்று பெயர். இந்த பெயர் விளங்கக் காரணம், அந்த மலை அருகில் வசிக்கும் உள்ளூர் விவசாயிகள் துஜியா இனக்குழு என அழைக்கப்பட்டனர்.

அவர்களுடைய எழுச்சியும் வளர்ச்சியும் வெற்றிபெற்றதால், அதற்கு இந்த மலையும் ஒரு காரணமாக நினைத்தனர். அந்த மகிழ்ச்சியில் இந்த பெயரை அவர்களின் தலைவனான ஷியாங் துகன் வைத்தார். இந்த பெயரில் சீன பேரரசரின் பாரம்பரிய பட்டப்பெயரும் உள்ளது ஒரு சுவாரஸ்யம்.

பார்வையாளர்கள் காலை 8.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். வசந்த காலமும், இலையுதிர் காலமும் ரசிப்பதற்கு ஏற்ற காலமாக கவனிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரலும் அக்டோபரும் இங்கு சுற்றுலாவிற்கு சிறப்பான மாதங்கள்.

இந்த இடம் சுற்றுலாத்தலமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இயற்கை எழில்தான் இதன் ஈர்ப்பு பொக்கிஷம். இங்கு செல்பவர்கள் மூன்று முக்கிய இடங்களை ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தங்க முக்கோணம் (Golden Triangle) என்று அழைக்கப்படும் ஷாங் ஜியாஜி வன பூங்கா, க்சோக்ஷியு பள்ளத்தாக்கு, டியான்சி மலைகள்தான் அவை.

இந்த மலையையும், காடுகளையும் மற்ற சுற்றுலா தலங்களை பார்வையிடுவது போல, எளிதாக எல்லோராலும் பார்வையிட முடியாது. இங்கு அபாயகரமும் வியப்பும் மிக்க பகுதிகள் ஏராளம். பூமியிலிருந்து ஈட்டி எழுந்ததுபோல கூராக விண்னை முட்ட எழுந்து நிற்கும் குன்றுகள்.

இவைகளுக்கு ஊடாக வெண்பஞ்சு இறகு விரித்த பறவைக்கூட்டம் போல பறந்தும் காற்றில் நீந்தியும் ஆங்காங்கே நின்றும் திரை போட்டிருக்கும் வெண்பனி புகை மேகங்கள் என பார்ப்பவர்களின் கண்களை சொக்க வைக்கிறது.

அதிலிருந்து கீழ்நோக்கினால் தலைசுற்றி விழவைக்கும் அதல பாதாள பள்ளத்தாக்குகள், பாறை, பரப்பு, பள்ளம், என எதைப் பற்றியும் கவலைப்படாமல் பரவி வளர்ந்து தன் பச்சை கொடியை ஏற்றியிருக்கும் தாவரங்கள் என அழகு பொக்கிஷமாக காட்சியளிக்கிறது.

இங்கு விடப்பட்டிருக்கும் ரோப் காருக்குள் ஏறி அமர்ந்தால் போதும். பூமித்தாய் மறைத்து வைத்திருக்கும் மனிதரில்லாத ஒரு மர்மதேசத்தை ரசித்து வரும் ஒரு ரம்மிய வேட்டை நடக்கிறது.

மலைகளுக்கு இடையே அபாயகரமான பாலங்கள், தளமே கண்ணாடி தவறி உடைந்தால் என்னாவோம்! என்ற த்ரில்லான பாதைகள். சுவாரஸ்யத்தின் உச்சமாக, பார்த்த பின்னும் தீரா ஆசையின் எச்சமாக காட்சியளிக்கிறது இந்த சீன இயற்கை.
#டியான்சி மலை சுற்றுலா!