இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பைத் தொடர்ந்து மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு. `நாயகன்’ படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம், கமல் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’.
அவரின் ஆதர்ச இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். கமலுடன் சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக் எனப் பலரும் நடித்து வருகின்றனர். இதனிடையே விரைவில் கமல் வெளிநாடு பறக்க இருப்பதால் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு வேகவேகமாக நடந்து வருகிறது என்கின்றனர். இதுகுறித்து பட வட்டாரத்தில் விசாரித்தில் கிடைத்த தகவல்கள்..
”சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் அன்பறிவ் மாஸ்டரின் மூவ்மென்ட்டில் கமல் – சிம்பு காம்பினேஷனின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இன்னும் சில வாரங்கள் சென்னை ஷெட்யூல் படப்பிடிப்பு இருக்கும். இதனைத் தொடர்ந்து கமல் தவிர மொத்த டீமும் கோவா பறக்கிறது என்கிறார்கள்.
படத்தில் கமல் – சிம்புவின் காம்போ பெரும் வரவேற்பைப் பெறும் என்கின்றனர். ரெண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரியையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் மணிரத்னம். படத்தில் த்ரிஷா, டான்ஸராக நடிக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது. சமீபத்தில் அட்டகாசமான ஒரு பார்ட்டி ஸாங்கை படமாக்கியுள்ளனர். இதற்காக அசத்தலான ஒரு குத்துப் பாடலும் போட்டிருக்கிறார் ரஹ்மான்.