21 ஆண்டுகளைக் கடந்து சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 21-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. திரை ஆர்வலர்கள் பெரிதும் ரசித்து மகிழும் இந்தத் திரைப்பட விழாவில், பல உலக நாடுகளில் பிரசித்தி பெற்ற படங்கள் திரையிடப்படுகிறது. இந்த ஆண்டு சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்த சில படங்களைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
இந்த ஆண்டு (2024) வெனிஸ் திரைப்பட விழாவில் ஸ்பானிய இயக்குநர் பெட்ரோ அல்மோடோவரின் ‘தி ரூம் நெக்ஸ்ட் டோர்’ (The Room Next Door) கோல்டன் லயன் விருதினை வென்றுள்ளது. இத்திரைப்படம் பெட்ரோ அல்மோடோவர் இயக்கிய முதல் ஆங்கிலத் திரைப்படம். எழுத்தாளர் சிக்ரிட் நுனேஸின் ‘வாட் ஆர் யூ கோயிங் த்ரூ’ (What Are you Going Through) என்ற நாவலைத் தழுவி திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர்.
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையரான ஜூலியன் மூர் மற்றும் டில்டா ஸ்வின்டன் ஆகியோரின் இயல்பான நடிப்பும், நிஜ வாழ்க்கையில் நிகழக் கூடிய சம்பவங்களும், படமாக்கிய இடங்களும் பார்வையாளர்களை அல்மோதோவர் உருவாக்கிய உலகத்தினுள் அழைத்துச் செல்கின்றன.
இன்க்ரிட் (ஜூலியன் மூர்) பிரபல எழுத்தாளர். தனது புத்தக வெளியீட்டு நிகழ்வில் சந்தித்த தோழி சொன்ன விஷயம் அவள் மனதை வருந்தச் செய்கிறது. நெடுங்காலம் தொடர்பில் இல்லாத உற்ற தோழி மார்த்தா (டில்டா ஸ்விண்டன்) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறாள் என்பதை அறிந்து அதிர்ச்சியாகிறாள். மார்த்தாவைச் சந்தித்து பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இருவரும் பழகிய காலகட்டத்தில் நெருக்கமாக இருந்துள்ளனர்.
நியூயார்க் டைம்ஸில் போர் நிருபராகப் பணி புரிந்து கொண்டிருந்த மார்த்தா நுண்கலைகளில் விருப்பமுள்ளவள். இளம் வயதுக்கேயுரிய உற்சாகத்துடன் இருப்பவள். அவர்கள் இருவரும் ஒரே நபர் டாமியனை (ஜான் டெர்டுரோ) வெவ்வேறு காலகட்டத்தில் காதலித்தவர்கள். மார்த்தாவின் இறுதிக் காலம் நெருங்கி வருவதை உணர்ந்த இன்கிரிட் உடனடியாக அவளைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்கிறாள்.
மெலிந்த தேகத்துடனும், தீரா வலியுடனும் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் மார்த்தாவைப் பார்த்து அவள் மனம் கலங்குகிறது. வெகு நாள் பிரிந்தவர்களாதலால் எவ்வளவு பேசினாலும் நேரம் போதாமல் அவர்கள் அதன்பிறகு அடிக்கடி சந்திக்கத் தொடங்குகிறார்கள்.
காலம் என்பது ஒரு மாயக் கண்ணாடி. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பருவங்கள் நழுவிக் கொண்டிருக்கும். அப்படித்தான் இன்கிரிட்டும் மார்த்தாவும் பழகிய தினங்களின் நீட்சியாக மார்த்தாவின் கடைசிக் காலத்தின் நாட்கள் மரணத்தின் நிறமாக மாறிக் கொண்டிருக்கிறது. சந்திக்காத நாட்களின் இடைவெளியைத் தனது வருகையாலும் ஆழமான உரையாடல்களாலும் இட்டு நிரப்ப இன்க்ரிட் தவறுவதில்லை. மார்த்தா முன்பு பகிர்ந்து கொள்ளாத தன் வாழ்க்கையின் ரகசியங்களை இன்கிரிட்டிடம் மனம் திறந்து பேசுகிறாள்.
மார்த்தா இளம்வயதில் ஒரு குழந்தைக்குத் தாயாகி தனது மகள் மிச்சேலை பெற்றோரிடம் வளர்க்கத் தந்துவிட்டு பணியில் கால நேரமின்றி மூழ்கிக் கிடந்தவள். அக்குற்றவுணர்வு தற்போது அவளை வாட்டினாலும், வாழ்விடத்திலும், மனத்திலும் தன்னை விட்டு வெகுதூரம் சென்றுவிட்ட மகளை திருப்பி அழைக்க அவள் முயற்சிக்கவில்லை. அவளது காதலன் பிரிந்து சென்றாலும், முதல் காதலின் நினைவு அவள் மனதை விட்டு நீங்காமல் இறுதிவரைத் தொடர்வதை அவளது பேச்சிலிருந்து இன்கிரிட் உணர்ந்து கொள்கிறாள்.
புற்றுநோய்க்கான நீண்ட கால சிகிச்சையும், மருத்துவமனை அறையில் முடங்கிக் கிடப்பதுமான தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பை தோழியிடம் பகிர்ந்து கொண்ட மார்த்தா, அவளிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறாள். தனக்குப் பிடித்த ஓரிடத்தில் நிம்மதியாக ஒரு வார இறுதியை ச் செலவிட ஆசைப்படுகிறாள், அந்த நாட்களில், எதுவும் செய்யாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒருவிதமான வெற்று மனநிலையில் தனது உயிரை ஒரு மாத்திரையில் முடித்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதை அமைதியாகக் கூறுகிறாள்.
ஒருவர் வாழ்க்கையை எப்படி கண்ணியமாக வாழ்ந்து முடிக்கிறாரோ, மரணத்தையும் அவ்விதமே அடைய விரும்புவார். வாழ்வின் சுக துக்கங்கள், போதாமைகள் எல்லாவற்றையும் கடந்த பின் ஏற்படும் ஒரு கையறு நிலை, நோய்மை. அதன் பிடியில் மரணம் நிகழ்வதென்பது மிகவும் துயரமானது. மகிழ்ச்சி, துயரம், வலி என்ற எல்லா பக்கங்களும் சுருங்கி கடைசி அத்தியாயமான மரணத்திடம் சரண் அடைந்துவிட்டால் அதைத் துணிவுடன் எதிர்கொள்ளலாம் என்று மார்த்தா முடிவெடுக்கிறாள்.
தான் கருணைக் கொலை செய்து கொள்ளும்போது இன்க்ரிட் அடுத்த அறையில் இருக்க வேண்டும் என்பதே மார்த்தாவின் கடைசி விருப்பம். ஏற்கெனவே மூன்று தோழிகளிடம் இதைப் பற்றி சொன்ன போது அவர்கள் பயந்து மறுத்துவிடவே, தன்னுடைய பட்டியலில் வெகு தூரத்தில் இருந்த இன்கிரிட்டிடம் இதைப் பற்றி வெளிப்படையாகக் கூறி, காவல் நிலையப் பிரச்சனைகளை எப்படி எதிர்நோக்குவது என்பதைப் பற்றியும் விரிவான திட்டத்தை எடுத்துச் சொல்கிறாள். முதலில் மறுத்தாலும், பின்னர் மனதைத் திடப்படுத்திக் கொண்டு இன்க்ரிட் மார்த்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அவளுடன் கிளம்பிச் செல்கிறாள்.
ஊருக்கு வெளியே அழகான ஒரு மலைப் பிரதேசத்தில் மனித சஞ்சாரமே இல்லாத வெகு அழகான தனி வீட்டில் அவர்கள் தங்குகிறார்கள். தனது மரணத்தை நிகழ்த்த மார்த்தா தேர்ந்தெடுத்து வாங்கிய அற்புதமான கலை உணர்வுடன் கட்டப்பட்ட கனவு வீடது. ஜன்னலைத் திறந்தால் நெடிந்துயர்ந்த மரங்கள், அதன் பின்னணியில் மலைத் தொடர் என எங்கும் எதிலும் பசுமை.
மன நிறைவுடன் இருவரும் ஆளுக்கொரு அறையைத் தேர்வு செய்து கொள்ள, இன்க்ரிட் மார்த்தாவின் அடுத்த அறையில் தங்காமல் ஒருசில படிகள் கீழே இறங்கினால் கீழே இருக்கும் அறையில் தங்குகிறாள். மார்த்தா அறைக் கதவைத் தாழிடாமல் இருந்தால் அவள் இன்னமும் உயிருடன் இருக்கிறாள் எனவும், தாழிட்டு விட்டால் அவள் இறந்துவிட்டதை இன்க்ரிட் அறிந்து கொள்ளலாம் என்றும் சொல்கிறாள்.
தனது கதையில் வரும் சம்பவம்தான் இதுவா? அல்லது நிஜத்தில்தான் இவையெல்லாம் நிகழ்கின்றனவா? என இன்க்ரீட் உணர்வதை இசையும், முகபாவனைகளும் சொல்லாமல் சொல்கின்றன. தினந்தோறும் மலைச் சரிவுகளில் நடைபயின்றும், அருமையான உணவுகளைச் சாப்பிட்டும், அற்புதமான திரைப்படங்களைப் பார்த்தும் தங்கள் பொழுதுகளை இருவரும் கழிக்கின்றனர்.
சாவின் நிழல் படிந்துள்ள விசித்திரமான ஒரு வாழ்க்கைத் தருணத்தில், வெவ்வேறு மனநிலையில் தோழியர் இருவரும் மன நெகிழ்ச்சியுடன் பொழுதுகளை ஒன்றாகக் கழிக்கின்றனர். தினமும் படிக்கட்டில் ஏறி மார்த்தாவின் அறைக் கதவை ப் பார்வையிடுவதும், அது திறந்து கிடப்பதைப் பார்த்து மன நிம்மதி அடைவதுமாக இருக்கும் இன்க்ரிட், அன்றாடம் நிகழ்வதையெல்லாம் தனது கணினியில் எழுதிக் கொண்டிருக்கிறாள்.
இறுதியில் மார்த்தா எப்படி மரணிக்கிறாள்? தகுந்த எச்சரிக்கையுடன் இருந்தாலும் காவல் துறையினரின் நுட்பமான கேள்விகளை இன்கிரிட் எப்படி எதிர்கொண்டாள்? தனது தாயின் சாவை அறிந்து தேடி வந்த மார்த்தாவின் மகளுடன் அதே வீட்டில் மீண்டும் இன்கிரிட் எவ்வாறாக ஓரிரவைக்கழிக்க நேர்கிறார் என்பதைப் பற்றியும் அழகியலுடன் கூறி இக்கதை அருமையாக முடிகிறது.
ஓர் அற்புதமான புத்தக வாசிப்பின் அனுபவம் எத்தகையதோ அப்படி இருந்தது ‘தி ரூம் நெக்ஸ்ட் டோர்’ திரைப்படம். இயக்குநர் பெட்ரோ அல்மோடோவேரரின் அனைத்துப் படங்களும் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை. இந்தப் படமும் இரண்டு முதிர்ந்த பெண்களின் வாழ்க்கையையும், தேடுதலையும், வெற்றியையும், அதிலொருவரின் மரணத்தையும் பதிவு செய்கிறது.
அதன் மூலம் மரணம் என்பது ஒரு விடுதலை. நன்றாக வாழ்ந்துவிட்டால் நன்றாகவும் சாகலாம். மரணத்துக்கு ஒரு நிறம் கொடுத்தால் ஏன் அது சாம்பலாக மட்டும் இருக்கவேண்டும்? அதுவொரு வெண்ணிற பனியாக இருக்கலாம் அல்லவா? பெரும்பாலும் வசனங்களில் நகரும் இத்திரைப்படத்தின் உள் அடுக்குகள் மனித வாழ்வின் ஆதாரமான விஷயங்களைப் பற்றி நுட்பமாகவும் அதே சமயம் ஆழமாகவும் அலசுகிறது.
வாழ்க்கையில் பிரித்து எடுக்கப்பட முடியாத முக்கியப் பகுதிகளான காதல், காமம், பிரிவு, மரணம் ஆகியவற்றை ஒரு பெண்ணின் கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியின் துல்லியமும், பிற்பகுதியில் கனவுப் படலம் போன்ற காட்சியமைப்புகள் கொண்ட ஒளிப்பதிவும் நம்மை நேரடியாக படத்துடன் ஒன்றிணைக்கின்றன.
தவிர, நீளமான காட்சியமைப்பின் போது கையாளப்பட்ட கோணங்கள் இப்படத்தை மேலும் மெருகேற்றுகின்றன. கதையைப் பிரதானமாக்கிய இசை மிக மெல்லியதாக, பார்வையாளர்களின் கவனத்தைத் தனியாகத் தவிர்ப்பதில் வெற்றி பெறுகிறது.
ஜூலியன் மூர் மற்றும் டில்டா ஸ்வின்டனின் உயிரோட்டமான அற்புதமான நடிப்பு பார்க்கும் அனைவரையும் முற்றிலும் வசப்படுத்தி உள்ளுக்குள் ஏதோவொன்றை நிகழ்த்துகிறது. மென்சோகம் மட்டுமல்லாமல், குறும்புகளும், வாழ்வானுபவங்களும் படம் நெடுகிலும் வருவதால் இருண்மையான படமாகிவிடாமல், அழகியலுடன் கூடிய எதார்த்தத்தைச் சித்திரிக்கும் திரைப்படமாகப் பரிணமிக்கிறது.
வாழ்வெனும் மகாசக்தியிடம் விடைபெற்று மரணத்தின் அழைப்பை ஏற்று நாம் அனைவரும் ஒருநாள் இறந்தேயாகவேண்டும். இதில் நாம் செய்யக் கூடியது ஒன்று மட்டுமே – அதிகம் புலம்பல்களோ, புகார்களோ இல்லாமல் நம்மை ஒப்புக் கொடுக்க எந்த நேரத்திலும் நாம் தயாராக வேண்டும். பெட்ரோ அல்மோடோவரின் திரைப்படம் இதைத் தான் பார்வையாளர்களிடம் கவிதைமொழியில் சொல்கிறது.
தி ரூம் நெக்ஸ்ட் டோர் (The Room Next Door)
மொழி – ஆங்கிலம்
இயக்கம் – பெட்ரோ ஆல்மோதோவர்
நடிப்பு – ஜூலியன் மூர், டில்டா ஸ்வின்டன், ஜான் டெர்டுரோ
இசை – ஆல்பெர்டோ இக்லீஷியஸ்
ஒளிப்பதிவு – எடுவர்ட் க்ரொ
படத்தொகுப்பு – தெரேஸா ஃபான்ட்