மகனாக நடித்திருக்கும் அவினாஷ் திவாரி, தொழில் வாழ்க்கையில் ‘நான் இன்னும் வளரவில்லை’ என்ற நம்பிக்கையின்மையையும் தந்தையிடம் ‘நான் ஒரு வளர்ந்த மனிதன்’ என நிரூபிக்கும் உறுதியையும் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான மெளனங்களை அழகாகக் கையாண்டிருப்பார். ஒவ்வொரு சூழலிலும், ஒவ்வொரு எமோஷன், ஒவ்வொரு மௌனம். குடும்ப உறவுகளிலிருந்து விலகியிருக்கும் ஒருவன் ஒவ்வொரு சிக்கலையும் ‘லாஜிக்கலாக’ கையாண்டு மனிதர்களிடம் தோற்றுப்போவதை படம் நெடுக நமக்கு உரைக்க வைக்கிறார். அவரின் அக்காவாக முதிர்ச்சியான பாத்திரத்தில் நடித்திருந்த பூஜாவும், காதலியாக நடித்திருந்த ஷ்ரேயா சௌத்ரியும் கச்சிதம்.
அவினாஷ் திவாரியின் அக்காவாக நடித்திருக்கும் பூஜா சரூப்புக்கு முதிர்ச்சியான கதாபாத்திரம். தந்தை, மகன் இருவரையும் ஒன்றாகத் தங்கவைக்கும் காட்சியில் தன்னை அளந்து வெளிப்படுத்தியிருப்பார்.
போமன் இரானி மற்றும் அலெக்சாண்டர் டினெலாரிஸ் திரைக்கதை எழுதியிருக்கின்றனர். ரயில் பெட்டி போல ஒன்றுடன் ஒன்று தொட்டுத் தொடரும் காட்சிகள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. புதுமையான கதை சொல்லல் இருந்தாலும், கார்பரேட் அலுவலகத்தின் டெம்ப்ளேட் காட்சிகள் பழக்கப்பட்டவையாக இருந்தன. ஒருமணி நேரம் 52 நிமிடங்கள் ஓடும் படத்தில் பெரும்பான்மை அமேயின் வீட்டிலும் வெளியிடங்களிலுமே நடப்பதனால் படத்தின் சுவாரஸ்யத்தை அது பாதிப்பதில்லை.
அன்பை வெளிப்படுத்த எப்போதும் ஒரு கொடுக்கல் வாங்கல் அவசியம். இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தந்தையிடம் தன்னால் வாங்கிக்கொள்ள என்ன இருக்கிறது என முன் தீர்மானத்துடன் அணுகும் மகனும், இத்தனை நாள் நான் கொடுத்து வளர்த்தவனிடம் கை நீட்டி ஒன்றைப் பெற்றுக்கொள்வதா? என பிடிவாதம் பிடிக்கும் தந்தையும் எத்தனையோ விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளத் தவறியிருக்கிறார்கள். அவற்றில் மிக எளிதாகத் தவறவிட்டது பரஸ்பரம் பாசாங்குகளுடன் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய ‘அன்பை’ என்பதை முறைத்தபடியே முத்தமிட்டுச் சொல்கிறது இந்த படம்.
இந்தியில் ஒரு மெய்யழகன், தமிழ் டப்பிங்கிலும் பார்க்கலாம் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது!