சிறுவயதில் தன் தாயும், தந்தையும் பிரிந்துவிட்டதால், காதல், கல்யாணம், குழந்தைகள், குடும்பம் உள்ளிட்ட சீரியஸ் ரிலேஷன்ஷிப்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் வாசு (ரியோ ராஜ்). மறுபுறம், இவற்றில் எல்லாம் நம்பிக்கையுள்ளவராக இருக்கிறார் மனு (கோபிகா ரமேஷ்). இருவருக்குமிடையே காதல் மலர்ந்து, மோதல் வெடித்து, பிரிவில் முடியும் தறுவாயில், இந்த உறவால் மனு கர்ப்பமானது தெரிய வருகிறது. இதை இருவரும் எப்படிச் சமாளிக்கிறார்கள், இறுதியில் கமிட்மென்ட் உறவுகளை விரும்பாத வாசு மாறினாரா, இல்லை அதற்கு நேர்மாறாக இருக்கும் மனு மாறினாரா, இருவரும் சேர்ந்தார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியிருக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்!’ திரைப்படம்.

காதலியைப் புரிந்துகொள்ளாமல் சீறுவது, தேவையில்லாத கோபம், ஆக்ரோஷம், கெத்து, ரொமான்ஸ் எனத் தமிழ் சினிமாவில் பார்த்துப் பழகிய ஹீரோ சட்டையும், உறவுகள் மேல் விரக்தி, காதலை வெளிப்படுத்த முடியாமல் திணறும் இடம் என அழுத்தமான எமொஷனல் சட்டையும் ரீயோ ராஜுக்குப் பொருந்தியிருக்கிறது. ஆனாலும், கதாபாத்திரம் போதிய ஆழமில்லாமல் எழுதப்பட்டிருப்பதால், சில காட்சிகளில் இரண்டு சட்டைகளும் கொஞ்சம் தொளதொளப்பாக இருக்கின்றன. பதற்றம், காதல், கோபம், ஆற்றாமை, அழுகை என எந்நேரமும் உணர்ச்சிகளோடு மல்லுக்கட்டும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தி, படத்திற்குத் தூணாக நின்று வலுசேர்த்திருக்கிறார் கோபிகா ரமேஷ்.
ரீயோ ராஜின் நண்பராக வரும் அருணாச்சலேஸ்வரன், தன் உடல்மொழியாலும் கவுன்ட்டர்களாலும் படத்தின் காமெடி மோட்டருக்கு மைலேஜ் ஏற்றியிருக்கிறார். டப்பிங் துறுத்தல்களைத் தாண்டி, இறுதிக்காட்சியில் மட்டும் கவனிக்க வைக்கிறார் ரெஞ்சி பணிக்கர்.
பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லான, துறுதுறுப்பான முதற்பாதி திரைக்கதைக்குத் தேவையான திரைமொழியைக் கொண்டுவந்திருக்கிறது. நான்-லீனியர் பாணி திரைக்கதையை, அதன் பரபரப்பும், துள்ளலும் குழையாமல் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தமிழரசன். ‘மார்டன் மேஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜா இசையிலும், குரலிலும் ‘கதவைத் திறந்தாயே’ பாடலில் மட்டும் அவரின் ‘வைப்’பை ஓரளவிற்கு உணர முடிகிறது. க்ளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் கைகொடுத்திருக்கிறது அவரின் பின்னணி இசை. இரு பிரதான கதாபாத்திரங்களின் வீட்டையும், அறையையும் வடிவமைத்த விதத்தில் சிவா சங்கரின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது.

இரண்டு வெவ்வேறு குணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை இணைக்கும் எமோஷனலான கதையை, கலகலப்பான திரைக்கதையாலும், பளபளப்பான திரைமொழியாலும் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார். கதாபாத்திரங்களின் அறிமுகம், அவர்களின் உலகம், உறவுச் சிக்கல், சமகாலத்தில் அவர்களுக்கு நடக்கும் பிரச்னை, முன்பு காதல் மலர்ந்த தருணங்கள் எனத் தொடக்கம் முதலே, முன்பின் என நகர்கிறது திரைக்கதை. நிகழ்காலக் கதையில் நடக்கும் காமெடியோடு, நான்-லீனியர் பாணியும் சேர்ந்து சுவாரஸ்யத்தைத் தந்து, ரசிக்கவும் வைக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் கான்செர்ட், ‘I’ll be there for you’ ஆல்பம் பாடல் போன்றவை ‘ஸ்வீட் லப்டப்ஸ்!’
கதைக்கரு போதிய ஆழமில்லாமல் இருப்பதாலும், இரண்டாம் பாதியிலும் பிரதான கதாபாத்திரங்கள் விரிவடையாமல் போனதாலும், அவர்களின் பிரச்னைகளும், அவை தொடர்பான காட்சிகளும் ரிப்பீட் அடிக்கும் உணர்வைத் தருகின்றன. அதனால் அதுவரை சுவாரஸ்யமாகவும் கோர்வையாகவும் நகர்ந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் துண்டுதுண்டான காட்சிகளாக ஊசலாடும் உணர்வினைத் தருகின்றன. மேலும், திடீரென கதாபாத்திரங்கள் புதிது புதிதாகத் திரைக்கதையில் நுழைவதும், அவற்றின் மீது அதீத எமோஷனை ஏற்றி, திரைக்கதையின் பிரச்னைகளை ‘பைபாஸ் சர்ஜரி’ செய்ய முயன்றதும் சிறிது அயற்சியைத் தருகிறது.
போதைப்பொருட்களை ரோமான்டிஸைஸ் செய்வது, திருநர்களை அபத்தமாகச் சித்திரிப்பது போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம். மேலும், நம்பகத்தன்மை இல்லாத இறுதிக்காட்சியில், அதீத எமோஷனை வலுக்கட்டாயமாகத் திணித்திருப்பதும் பெரிய மைனஸ். அதேபோல, கருக்கலைப்பு குறித்த தெளிவான பார்வை படத்தில் மிஸ்ஸிங்! அது பெண்ணின் முடிவு என்பதை ஒரு வசனமாக மட்டும் கடந்துவிட்டு, மீதி அனைத்து இடங்களிலும் அபார்ஷனுக்கு எதிரான வாதத்தையே பிரதானமாக முன்னிறுத்துகிறது படம்.

இப்படிப் பல ‘ஹார்ட்ல தொலா’க்களைத் தாண்டி, முதற்பாதியிலிருந்த சில லாஜிக் ஓட்டைகளை, இரண்டாம் பாதியில் நேர்த்தியாக அடைத்த விதம், ‘கௌரவம்’ என்ற பெயரில் நடக்கும் குடும்ப வன்முறை, இறுதிக்காட்சியில் வரும் ஒரு காமெடி ட்விஸ்ட், அருணாச்சலேஸ்வரனின் கதாபாத்திரத்தையும், அவரின் பிரச்னையையும் இறுதிவரை கொண்டுவந்து, நெகிழ்வாக முடித்தது எனச் சில ஐடியாக்களும், காட்சிகளாகவும் படத்துக்கு ஆக்சிஜன் கொடுத்து, காப்பாற்றப் போராடியிருக்கின்றன.
திரைமொழியில் காட்டிய மெனக்கெடலை, கதைக்கருவை ஆழமாக்குவதிலும், கதாபாத்திரங்களை இன்னும் தெளிவாக்குவதிலும் காட்டியிருந்தால், இந்த ‘ஸ்வீட்ஹார்ட்!’ நிறைவான தித்திப்பைத் தந்திருக்கும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
