அகரம் அறக்கட்டளையின் மூலமாக பல ஏழை எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார் நடிகர் சூர்யா.
சென்னை தி. நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளையின் அலுவலகத்தை இன்று சூர்யா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சூர்யா, “2006-ல தோன்றிய விதைதான் இன்று ஆலமரமாக வளர்ந்து நிக்குது. 2006-ல கஜினி படத்திற்குப் பிறகு நமக்கு அன்பைக் கொடுக்கிற மக்களுக்காக அர்த்தமுள்ளதாக என்ன விஷயம் பண்ண முடியும் யோசிச்ச சமயத்துல இயக்குநர் த.செ.ஞானவேல் ஒரு விஷயத்தை சொன்னாரு. `இன்னைக்கு முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்க. பெற்றோர்களால கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தினக்கூலி வேலை தேடுற மாணவர்கள் இருக்காங்க.’னு சொல்லும்போது தோன்றிய யோசனைதான் `அகரம்’. 2010-ல இருந்துதான் அகரம் பவுடேசனோட விதை திட்டம் தொடங்குச்சு. இப்போ வரைக்கும் 5000-க்கும் மேல் மாணவர்கள் இதனால படிச்சிருக்காங்க. அப்போ 10 – 10 சின்ன அறையில அகரம் அலுவலகத்தை தொடங்கினோம். அதன் பிறகு அப்பா கொடுத்த இடத்துல அகரம் செயல்பட்டு வந்தது.

இப்போதும் முதல் தலைமுறை பட்டதாரிகள், பெற்றோர்களால கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் இருக்காங்க. `கல்வியே எங்கள் ஆயுதம். நான் பெற்றதை இந்த சமூகத்துக்குக் கொடுப்பேன்’னு இங்க இருக்கிற தம்பி, தங்ககைகள் சொன்னாங்க. அதுதான் அகரமாக மாறியிருக்கு. அகரம் தொடங்கி 20 வருடங்கள் ஆகப்போகுது. அதே வீரயத்தோட இன்னும் 20 வருடங்கள் செயல்படுறதுக்குக் காரணம் முன்னாள் மாணவர்கள் செய்த விஷயங்கள்தான். இது படிப்புக்காக கொடுக்கிற நன்கொடையில உருவான இடமல்ல. நீங்க எனக்குக் கொடுத்த வருமானத்தின் மூலமாக உருவான இடம்தான்.
இப்போதும் அரசுப் பள்ளி மாணவர்கள்கிட்ட இருந்து 10,000 விண்ணப்பங்கள் வருது. அதுல 700 மாணவர்களோட வாழ்க்கையை மாற்ற முடியுது. இன்னும் பலரோட அன்பும், ஆசீர்வாதமும் தேவைப்படுது. 20 வருடமாக அகரம் செயல்படுறதுக்கு முக்கிய காரணம் தன்னார்வலர்கள்தான். ஜவ்வாது மலை பக்கத்துல இருந்து ஒரு மாணவர் விண்ணப்பிச்சிருந்தாரு. அந்த மலைக்கு சைக்கிள், வாகனங்கள்ல போக முடியாது. நடந்துதான் போகணும். 9 தன்னார்வலர்கள் தேடி போய் பார்க்கிறாங்க. பத்தாவதாக ஒருவர் அங்கப் போய் அந்த மாணவர்கிட்ட விண்ணப்பத்தை வாங்குறாரு.

அந்த மாணவர் இன்னைக்கு மருத்துவராக வந்திருக்கிறார். இது மக்களால மக்களுக்கு செய்யப்படுகிற விஷயமாகப் பார்க்கிறேன். ஒரு கனவோட கட்டின இடம் இது. இது அலுவலகம் என்பதை தாண்டி பலருக்கு புத்துணர்ச்சியோட சிந்திக்கிறதுக்கான இடமாக இது இருக்கும். உலகம் நம்மகிட்ட எப்படியான விஷயங்களை எதிர்பாக்குது. எப்படியான விஷயங்களை நம்ம படிக்கும்போது கத்துக்கணும்னு மாணவர்கள் வொர்க் ஷாப் மூலமாக இந்த இடத்துல கத்துக்கப் போறாங்க. இந்த இடம் எங்களுக்கு தாய் வீடு மாதிரி. சொந்தவீடு கட்டும்போது இருந்த சந்தோஷத்தைவிட இந்த அலுவலகத்தோட திறப்பு விழா மகிழ்ச்சியைக் கொடுக்குது. ” என்றார்.