சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திரைப்படங்கள் தொடர்பான பல அப்டேட்டுகள் நேற்று வந்திருந்தது!
போஸ்டர், டைட்டில் டீசர் என எஸ்.கே-வின் ரசிகர்களுக்கு நேற்றைய தினம் அதிரடி டிரீட்தான்! `அமரன்’ படத்தின் வெளியீட்டுப் பிறகு அவரின் படங்களின் மீதான எதிர்பார்ப்பு பல மீட்டருக்கு எகிறியிருக்கிறது. `அமரன்’ படத்தை தொடர்ந்து பல அதிரடியான லைன் அப்களையும் தன் கைவசம் வைத்திருக்கிறார் எஸ்.கே.
கடந்த 2014-ம் ஆண்டு `மான் கராத்தே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதே என் கனவு எனக் கூறியிருந்தார் எஸ்.கே. அந்த கனவு தற்போது அவருக்கு கைகூடியிருக்கிறது. முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு `மதராஸி’ என தலைப்பை வைத்து டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படம் சிவகார்த்திகேயனின் கரியர் கவுன்ட்டில் 23-வது திரைப்படம். மீண்டும் ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் களமிறங்கியிருக்கிறார். இந்த `மதராஸி’ திரைப்படம் இந்தாண்டில் வெளியாகிவிடும் என படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஒரு நடிகரின் கரியரில் அவர்களின் 25-வது படத்தை ஒரு மைல்ஸ்டோன் ப்ராஜெக்ட்டாகவே கருதுவார்கள். அப்படி யோசித்து சுதா கொங்கரா இயக்கும் `பராசக்தி’ திரைப்படத்தை தன்னுடைய 25-வது படமாக தேர்தெடுத்திருக்கிறார் எஸ். கே. ப்ரீயட் கதையில் உருவாகும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாகவும், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல, ஜி.வி. பிரகாஷுக்கும் இப்படம் ஒரு மைல்ஸ்டோன்தான். அவர் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இதுதான்.
இந்த இரண்டு திரைப்படங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படங்களின் விவரம். இதை தாண்டி `அமரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் `டான்’ படத்தின் இயக்குநர் சி.பி.சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக அப்டேட் கொடுத்திருந்தார். அத்திரைப்படம் எஸ்.கே-வின் 24-வது படமாக உருவாகவிருந்தது. ஆனால், அதன் பிறகு அப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

`கோட்’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவிருப்பதாக கூறியிருந்தார். சமீபத்திய பேட்டியில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தியும், “சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறோம்.” எனக் கூறியிருந்தார். வெங்கட் பிரபு இயக்கும் படமும், ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் படமும் தனி தனி திரைப்படமா அல்லது ஒரே படமா? என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரியவரும்.
இந்த லைன் அப்களையெல்லாம் தாண்டி `குட் நைட்’ படத்தின் இயக்குநரான விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் எஸ்.கே ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக பேசப்படுகிறது. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
இதில் எந்த திரைப்படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்?
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX