90 களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவரைப் போலவே திரைத்துறையில் பெரும் வெற்றிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்துவார் என “பார்வை ஒன்றே போதுமே” திரைபடத்தில் அறிமுகமானபோதே எதிர்ப்பார்ப்பை கிளப்பியவர் சிம்ரனின் தங்கை மோனல் நாவல். தொடர்ந்து 2000-களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்தார். `பத்ரி’, `சமுத்திரம்’, `சார்லி சாப்ளின்’ போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளரத் தொடங்கினார்.

ஆனால், 2002-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி திரையுலகை அதிரச் செய்தது. அப்போது அவருக்கு வயது 21. இவரின் தற்கொலைக்குப் பின்னணியில் காதல் விவகாரம் இருப்பதாக வதந்திகள் பரவியது. அவர் எழுதியதாக வெளியான தற்கொலைக் குறிப்பில் கூட ”வாழ்க்கையில் உண்மையான ஆண்மகனை நான் சந்திக்கவே இல்லை” எனக் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
நடிகை மோனாலின் மரணம் குறித்து பேசும்போதெல்லாம் உடைந்துவிடுவார் அவரின் சகோதரி நடிகை சிம்ரன். ஒவ்வொரு வருடமும் மோனாலின் நினைவு நாளை அனுசரித்து வரும் நடிகை சிம்ரன், நேற்று தன் எக்ஸ் பக்கத்தில், “இந்த 23 வருடங்களில் ஒருநாள்கூட உன்னை நாங்கள் நினைக்காமல் இருந்ததில்லை மோனல். நீ மறைந்திருக்கலாம் ஆனால் யாராலும் மறக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். சிம்ரனின் இந்தப் பதிவு அவரின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.