மும்பையைச் சேர்ந்த ஒரு ரசிகை நடிகர் சஞ்சய் தத் மீது கொண்ட அன்பால் தனது முழு சொத்தையும் அவருக்கு எழுதி வைத்துவிட்டார்.
நிஷா பாட்டீல் என்ற அந்த 62 வயது ரசிகை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தபோது தனது பெயரில் வங்கியில் உள்ள பணத்தை நடிகர் சஞ்சய் தத் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கூறி கடிதம் எழுதினார்.

இது குறித்து வங்கி நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் நடிகர் சஞ்சய் தத்தை அணுகி ரசிகையின் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதனைக் கேட்டு சஞ்சய் தத் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். இதற்கு முன்பு தான் அந்த ரசிகையை ஒரு முறை கூட நேரில் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். அதோடு அந்த சொத்திற்கு உரிமை கோரப் போவதில்லை என்றும், அது தனக்குத் தேவையில்லை என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சஞ்சய் தத் வழக்கறிஞர் இது குறித்துக் கூறுகையில், “‘நாங்கள் அந்த பணத்திற்கு உரிமை கோரவில்லை. சொத்துக்கள் அந்த ரசிகையின் குடும்பத்திற்குக் கிடைக்கத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
வங்கியில் இருக்கும் பணம் மற்றும் இதர சொத்துக்கள் என மொத்தம் 72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சஞ்சய் தத்திற்குக் கொடுக்கும்படி, கூறி உயில் எழுதி வைத்துவிட்டு நிஷா பாட்டீல் உயிரிழந்துவிட்டார். சஞ்சய் தத்திற்கு ரூ.300 கோடி அளவுக்குச் சொத்துக்கள் இருக்கிறது. ஒரு படத்திற்கு 8 முதல் 12 கோடி ரூபாய் வரை சஞ்சய் தத் சம்பளம் வாங்குகின்றார். துபாயிலும் சஞ்சய் தத்திற்குச் சொந்த வீடு இருக்கிறது.