தற்போது இப்படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ரீ ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலிலேயே 5.14 கோடி வசூலித்தது. மேலும், இரண்டாம் நாள் 9.5 கோடி வசூலித்து முதல் ரிலீஸில் வசூலித்ததைவிட அதிகமக வசூலித்திருக்கிறது. மொத்தமாக, முதல் வாரத்திலே சுமார் 30.67 கோடி வரை வசூலித்து சாதனைப் படைத்திருக்கிறது இத்திரைப்படம். இத்திரைப்படம் 2016-ம் ஆண்டு வெளியானபோது எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. பிறகு, படமும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படத்தில் புதுமுகங்களான ஹர்ஷ்வர்தன் ரானே, மவ்ரா ஹோகேனே ஆகியோர் நடித்திருந்தனர். இறுதியில் பாலிவுட்டின் மறக்கப்பட்ட படங்களின் பட்டியலுக்கு `சனம் தேரி கசம்’ தள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்த ரீ ரிலீஸ் அதிகளவிலான வசூலை ஈட்டி பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இப்படம் ரீ ரிலீஸான சமயத்தில் ஆமீர் கானின் மகனான ஜுனைத் கான் மற்றும் குஷி கபூர் நடித்த `லவ்யாபா (லவ் டுடே இந்தி ரீமேக்)’ கிறிஸ்டோபர் நோலனின் `இன்டர்ஸ்டெல்லர்’ உலகளாவிய ரீ ரிலீஸ் என வலிமையான போட்டிகள் இருந்தபோதிலும் இந்த சாதனையைப் படைத்திருக்கிறது இப்படம். இந்த டிஜிட்டல் யுகத்தில் உணர்ச்சிமிகுந்த காதல் கதைகளை கொண்ட திரைப்படங்களுக்கான ஏக்கம் அதிகரித்துள்ளது. இதுதான் `சனம் தேரி கசம்’ படத்துக்கான ரசிகர் பட்டாளம் அதிகரிக்க காரணமாக அமைந்திருக்கிறது. காலப்போக்கில் கருத்துக்கள் எவ்வாறு மாறக்கூடும் என்பதை இப்படத்தின் மறுவெளியீட்டின் வெற்றி பிரதிபலிக்கிறது.