இவரை தொடர்ந்து வந்துப் பேசிய முத்துக்குமரன், “ ஒரு பத்திரிகையாளராக கனி அண்ணனை `தலைக்கூத்தல்’ படத்துக்காக நேர்காணல் பண்ணியிருக்கேன். இன்னைக்கு இந்த மேடையில நிக்கிறது கொஞ்சம் பதட்டமாகதான் இருக்கு. பரபரப்பாக ஓடிக்கிட்டு இருக்கிற இந்த மானுட சமூகத்தை நிறுத்தி பொதுவுடைமையையும், பொதுவாக நம்ம அலட்சியப்படுத்துற நம் தந்தை, தாய் போன்ற உறவுகளின் உணர்வுகளை கொஞ்சம் சத்தமாக சொல்லி மனுஷன் மனுஷனாக வாழ்றதுக்கான வழியைப் போட்டுக் கொடுத்த எளிய மனிதர் கனி அண்ணன். கனிவான அகத்துக்கும் கடுமையான முகத்துக்கும் சொந்தக்காரராக இருக்கக்கூடிய தந்தைகளுக்கான ஒரு உருவம் தயாரிக்கணும்னா அதுதான் சமுத்திரக்கனி அண்ணன்.

`பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்த்தல் அதனினும் இலமே’னு கனியன் பூங்குன்றன் சொன்ன வார்த்தைக்கான அடையாளமாக இந்தச் சிறுவனை இந்த மேடையில உட்கார வச்ச கனி அண்ணனுக்கு மீண்டுமொரு பெரிய நன்றி. `நான் வீழ்ந்துவிட்டால் என்ன, என் துப்பாக்கியை ஏந்திக் கொள்ள என் தோழர்கள் தயராக இருக்கிறார்கள். தோட்டாக்கள் ஒருபோதும் தூங்குவதில்லை’னு சே குவேரா சொல்லுவாரு. அப்படி அவருடைய தோட்டாக்களை ஏந்துவதற்கான இயக்குநர்களை தொடர்ந்து உருவாக்கிக்கிட்டே இருக்கும் இந்த சமுத்திரம் என்றும் வற்றாது என்கிற பெரிய நம்பிக்கை இருக்கு.” என்றார்.