இந்நிகழ்வில் பேசிய நடிகர் ஆதியிடம் தமிழில் படங்கள் உங்களுக்கு குறைவாக வருகிறதா? அல்லது தேர்தெடுத்து நடிக்கிறீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் ஆதி, “ வாய்ப்புகள்தான் குறைவு. எதனால இப்படினு தெரில. எனக்கு கால் வலிக்கல. தொடர்ந்து இந்தக் களத்துல ஓடிகிட்டேதான் இருக்கேன். நான் தெலுங்குப் படம் பண்ணினாலும் இங்கதான் இருக்கேன். அங்க ஷூட்டிங் நேரத்துல போவேன். மற்றபடி நான் இங்கதான் இருக்கேன். நான் இதுவரைக்கும் அதிகளவிலான அறிமுக இயக்குநர்களோடுதான் படம் பண்ணியிருக்கேன். இந்தப் படத்தின் இயக்குநரான அறிவழகன் சாரோட முதல் படம்தான் நான் நடிச்ச `ஈரம்’ திரைப்படம். அதுபோல `மரகத நாணயம்’ படத்தோட இயக்குநருக்கும் அது முதல் திரைப்படம். இந்தப் படத்தோட இயக்குநர் அறிவழகன் சார் அருண் விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் `பார்டர்’ படத்தை நான் பார்த்துட்டேன். ரொம்ப நல்ல படமான அது வேறு ஒரு காரணத்துல சிக்கியிருக்கு.
கூடிய விரைவுல அந்தப் படமும் வெளியாகும். வெளிவரும் நேரத்துல அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ” என்றவர், “ கல்யாணத்துக்கு முன்னாடி பேய் மேல நம்பிக்கை இல்ல. இப்போ….நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.” என நகைச்சுவையாகவும் பேசினார்.
மேலும் பேசிய அவர், “ இந்தப் படம் கமிட்டானதும் நண்பர்கள்கிட்ட சொல்லும்போது `ஹாரர் திரைப்படமா..ஏன்’னு கேட்டாங்க. ஹாரர் திரைப்படம்னா குறைவாக பார்க்கிற பார்வை இங்க இருக்கு. இயக்குநர் அறிவழகனுடைய கதையில நேர்மை இருக்கும். அவருடைய திரைக்கதையில சுவாரஸ்யமான அம்சங்கள் அத்தனையும் இருக்கும். சில படங்களைப் பார்க்கும்போது `இது ஹாலிவுட் படம் மாதிரியே இருக்கு’னு சொல்வாங்க. நம்ம ஊர்ல அதைவிட இன்னும் நல்லா பண்ணமுடியும்னு இந்தப் படத்தோட தொழில்நுட்பக் குழு நிரூபிச்சிருக்காங்க.” என்றார்.