கடந்த 2023-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி அதிரடியான வெற்றியைப் பெற்றதோடு மாபெரும் வசூலையும் அள்ளியது `ஜெயிலர்’.
இந்த முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். வழக்கம்போலவே அறிவிப்புக்கு இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் நடிப்பில் நகைச்சுவையான வடிவில் ஒரு ப்ரோமோவையும் வெளியிட்டிருந்தார்கள். இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கும் அதிரடியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ரஜினிக்கு ஜப்பானிலும் அதிகளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த 1998-ம் ஆண்டு ரஜினியின் `முத்து’ திரைப்படம் ஜப்பானில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 24 ஆண்டுகளுக்கு முன்பு `முத்து’ திரைப்படம் செய்த வசூல் சாதனையை வேறு எந்த இந்திய திரைப்படத்தாலும் நெருங்க முடியவில்லை. அந்தளவுக்கு முத்துவாக ரஜினி ஜப்பான் மக்களிடையே பரிச்சயமாகிவிட்டார். சொல்லப்போனால், ரஜினியின் பெயரை பச்சைக்குத்திக் கொள்ளும் அளவுக்கு ரஜினியைக் கொண்டாடும் ரசிகர்கள் அங்கு இருக்கிறார்கள். `முத்து’ படத்தைப்போல ரஜினியின் மற்ற சில திரைப்படங்களுக்கும் அங்கு அதிரடியான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அந்த வரிசையில் `ஜெயிலர்’ திரைப்படமும் வருகிற 21-ம் தேதி ஜப்பான் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏற்கெனவே அதிகளவிலான வசூலை ஈட்டிய `ஜெயிலர்’ திரைப்படம் ஜப்பானில் வெளிவருவதன் மூலம் இன்னும் அதிகப்படியான வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானில் `முத்து’ திரைப்படத்தை தாண்டி எஸ்.எஸ். ராஜமெளலியின் `ஆர். ஆர். ஆர்’, `பாகுபலி – 2′ போன்ற திரைப்படங்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த `மகாராஜா’ திரைப்படமும் ஜப்பானில் வெளியானது.