இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு முறை வெள்ளியும், வெண்கலமும் வென்றவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்ற இவருக்கும், போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் கடந்த 22-ம் தேதி தெலுங்கு பாரம்பரிய முறைப்படி உதய்பூரில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (24-ம் தேதி) ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த திருமண வரவேற்பில் இந்தியாவின் பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார் தன் மனைவி ஷாலினி, மகள், மகனுடன் கலந்துகொண்டார். அவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு வரும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.