நடிகை ப்ரியங்கா சோப்ரா விஜய்யுடனான `தமிழன்’ திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிப்பிற்கு அறிமுகமானார். ப்ரியங்கா சோப்ரா நடித்த ஒரே திரைப்படம் இது மட்டும்தான். இத்திரைப்படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு முழுவதுமாக ஹாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வந்த ப்ரியங்கா சோப்ரா ராஜமெளலி – மகேஷ் பாபு படத்தின் மூலம் மீண்டும் இந்திய சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தற்போது அவரின் தாயார் மது சோப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் பற்றி பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் அளித்த பேட்டியில், “முதலில் ப்ரியங்கா அத்திரைப்படத்தின் வாய்ப்பை நிராகரித்தார். அதன் பிறகு படக்குழுவினர் என்னுடைய கணவரை தொடர்புக் கொண்டு பேசினர். பிறகு ப்ரியங்காவை சமாதானப்படுத்துவது பெரிய சவாலாக இருந்தது. அவரின் தந்தை சொன்னதனால் அவர் இந்தப் படத்தில் நடித்தார். ப்ரியங்கா விஜய்யின் மேல் அதிகளவிலான மரியாதை வைத்திருக்கிறார். அவர் மிகவும் நல்ல மனிதர். நான் முதலில் இந்தச் சின்ன பெண் இந்தப் பெரிய நடிகருடன் நடிகப்போகிறார் என்பதை எண்ணி பயம் கொண்டேன். ஆனால் அவர் ப்ரியங்காவிடம் மிகவும் அன்பாக நடந்துக் கொண்டார். அதுமட்டுமல்ல வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். விஜய் அற்புதமாக நடனமாடக்கூடியவர். ராஜூ சுந்தரம் மாஸ்டரின் நடனங்கள் அப்போது கடினமாக இருந்தது. தயாரிப்பாளர்களும் ப்ரியங்காவை நன்றாக பார்த்துக் கொண்டார்கள்.” எனக் கூறியிருக்கிறார்.