உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா சிவராத்திரி நிகழ்வுடன் நிறைவு பெற்றது.

கங்கையும், யமுனையும், சரஸ்வதியும் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமத்தில் தினமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவகள் புனித நீராடினர். இவர்களுடன் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களும் புனித நீராடினர்.

பாவங்களைப் போக்கவும் மோட்சத்தை அடையவும் வழி வகுப்பதாக நம்பப்படும் ஷாஹி ஸ்னான் என்னும் முக்கிய சடங்கை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள்.

அலைகடலென மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கும்பமேளா பகுதியைச் சுற்றி சுமார் 2000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட கண்காணிப்பின் வாயிலாக கும்பமேளா பகுதி முழுவதும் ஏழடுக்கு பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து பிரயாக்ராஜிற்கு தேவைகளின் அடிப்படையில் ஏறத்தாழ 1000 ரயில்கள் இயக்கப்பட்டன.

ட்ரோன்கள், கண்காணிப்பு கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்னறிவிப்பு மாதிரிகள் போன்றவை அமைக்கப்பட்டன.

நடிகைகள் தமன்னா, கத்ரீனா கைஃப், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, அக்ஷ்ய குமார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்

மகா கும்பமேளாவுக்கு 45 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து 66 கோடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.