அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் பா.ரஞ்சித். விக்ரமை வைத்து ‘தங்கலான்’ படத்தில் மண்ணின் பூர்வகுடிகள் தங்களின் வேரை அறிந்துகொள்ளும் பயணத்தை மாயாஜாலங்கள் கலந்து கொடுத்த ரஞ்சித், இப்போது ‘வேட்டுவம்’ படத்தை தொடங்கியிருக்கிறார்.

வேட்டுவம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸில் நடந்த 75 வது கான் திரைப்பட விழாவில் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். அசத்தலான கோட் சூட் காஸ்ட்யூமில் ரஞ்சித்தும், படத்தின் அப்போதைய தயாரிப்பாளர்களும் திரண்டு போஸ்டரை அறிமுகம் செய்திருந்தார்கள். அதில் நடிகர்கள் அறிவிக்கப்படவில்லை. ‘வேட்டுவம்’ படத்தை தொடங்குவார் என எதிர்பார்த்த போது, ‘தங்கலா’னை கொண்டு வந்தார். இப்போது மீண்டும் ‘வேட்டுவம்’ வேலைகளை தீவிரப்படுத்தி வந்தார் ரஞ்சித். மதுரை பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதை இது என்கின்றனர்.

‘தங்கலான்’ படத்தில் 19ம் நூற்றாண்டின் சமூக மோதல், சாதியக் கட்டமைப்பு, ராமானுஜர் செய்த பணிகள், நடுகல் வழிபாடு, ரயத்துவாரி வரி என இதுவரை தமிழ் சினிமா பேச மறுத்த வரலாற்றுப் பக்கங்களை பேசியிருந்ததைப் போல, ‘வேட்டுவ’மும் பல விஷயங்களை பேசப் போகிறது என்கிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக காரைக்குடி பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.

‘சார்பட்டா பரம்பரை’க்கு பின் ரஞ்சித்துடன் ஆர்யா மீண்டும் இணைந்துள்ளார். இதில் ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன், லிங்கேஷ் என பலரும் நடித்து வருகின்றனர். ஹீரோயினாக ‘பொன்னியின் செல்வ’னில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலா நடிக்கிறார். நாகசைதன்யாவின் மனைவியான சோபிதா, திருமணத்திற்கு பின் நடிக்கும் முதல் படமிது என்கிறார்கள்.
ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியான ‘பாட்டல் ராதா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘தங்கலான்’ படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ், இந்த படத்திற்கும் இசையமைக்க கூடும் என்ற பேச்சு இருக்கிறது. காரைக்குடி ஷெட்யூலை முடித்துவிட்டு, சென்னையிலும் படப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள்.