கே.எஸ். காளிதாஸ் மற்றும் கண்ணா. ஆர் ஒளிப்பதிவில் சில ப்ரேம்களில் நம்பிக்கை தந்தாலும், மற்ற இடங்களில் நேர்த்தியில்லாத திரைமொழிக்கே வழிவகுக்கிறது. கச்சிதமும், கோர்வையும் இல்லாமல் நான்கு கதைகளையும் தத்தளிக்க விட்டிருக்கிறது ஷான் லோகேஷின் படத்தொகுப்பு. முக்கியமாக, பல காட்சிகள் ஜம்ப் ஆகி ஓடுவது ஏமாற்றமே! ஜோஸ் ஃப்ராங்கிளினின் இசையில் பாடல்கள் கைகொடுக்கவில்லை.
சுற்றி வளைக்காமல் நான்கு கதைகளுக்குள்ளும் நேராகத் திரைக்கதை செல்வது தொடக்கத்தில் திரையின் மீதான பிடிப்பைக் கூட்டுகிறது. ஆனால், அந்த அழுத்தமான கதைகளுக்கு நியாயம் செய்யும் வகையில் காட்சிகள் இல்லாததும், ஒளிப்பதிவு, எடிட்டிங் எனத் தொழில்நுட்ப ரீதியாக சீரியல்தன்மையைத் தரும் திரைமொழியும் இறுதிக்காட்சி வரை சறுக்கல்களையே தந்திருக்கின்றன. அதிகாரத்திற்கு எதிராகப் போராடும் பெண், பெண்களுக்கும் திருநர்களுக்கும் நிகழ்த்தப்படும் கொடுமைகள், ஆணவக் கொலை, தன்பாலின ஈர்ப்பு, குடும்பம் என்ற பெயரில் கட்டப்படும் போலி கௌரவம், அதனால் பாதிக்கப்படும் பெண்கள் எனப் பல சமூக அவலங்களையும், சமூக கருத்துகளையும் பேச முயன்றிருக்கிறது படம். ஆனால், அவை காட்சிகளாக திரையேறாமல், பக்கம் பக்கமான வசனங்களாகவும், தத்துவார்த்த போதனைகளாகவும் மட்டுமே துறுத்துக்கொண்டு நிற்கின்றன.