நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கி வருபவர் நயன்தாரா.
இவரை ரசிகர்கள் பலரும் `லேடி சூப்பர் ஸ்டார்” என அழைப்பார்கள். சீனியர் நடிகையாகவும் இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்படுவதாலும், அதிகப்படியான ஃபீமேல் சென்ட்ரிக் திரைப்படங்கள் நடித்து ஹிட் கொடுப்பதனாலும் ரசிகர்கள் இவரை இப்பெயரைக் கொண்டு அழைப்பார்கள். இனி அந்தப் பெயரைக் கொண்டு தன்னை அழைக்க வேண்டாம் என அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் அவர், “என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது, உங்கள் நிச்சயமற்ற அன்பும் ஆதரவும்தான் அதை அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின் போது என் தோளில் சாய்ந்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள். நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை `நயன்தாரா’ என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது-ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும். பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்