இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா காலமானார். பாரதிராஜா இயக்கிய `தாஜ் மஹால்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அப்படத்திற்குப் பிறகு `சமுத்திரம்’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் பரிச்சயமான அவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் கடைசியாக கடந்தாண்டு வெளியான `ஸ்நேக் அன்ட் லாடர்ஸ்’ வெப் சீரிஸில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர் மணி ரத்னத்திடம் `பாம்பே’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.

உதவி இயக்குநராக அனுபவம் கொண்ட இவர் `மார்கழி திங்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் பரிச்சயமானார். இவருக்கும் நடிகை நந்தனாவுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இன்று மாலை மனோஜ் பாரதிராஜா காலமாகியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். அவருடைய மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.