பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு 60-வது பிறந்தநாள் இன்று. இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இன்று பிறந்தநாள். அவர் இயக்கி வரும் `கூலி” திரைப்படத்தில் ரஜினி, நாகர்ஜூனா, சத்யராஜ், செளபின் சாஹிர், உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்து வருவதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இவர்களை தாண்டி நடிகர் ஆமீர் கானும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், சன் பிக்சர்ஸ் அது தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனை தொடர்ந்து தற்போது அவருடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்திருக்கிறார். அவர் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் லோகேஷ், “இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அமீர் கான் சார். நமக்கிடையே நிகழ்ந்த அந்த உரையாடலை எண்ணி மகிழ்கிறேன். உங்களுடைய நுண்ணறிவும், கதைசொல்லலில் உங்களுக்கு இருக்கும் பேரார்வமும் எனக்கு எப்போதும் ஊக்கமளித்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் திரையில் மேலும் மேஜிக்குகளை உருவாக்குவோம். இந்த ஸ்பெஷலான நாளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன் சார்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.