அஜித்:
`விடாமுயற்சி’ திரைப்படம் பிற்போடப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே `இருங்க பாய்’ மொமன்ட்டைப் போல பிப்ரவரி 6-ம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவித்தது லைகா நிறுவனம். `பண்டிகை தினத்தன்று படம் வெளிவரவில்லை எனக் கவலைக் கொள்ள வேண்டாம். படம் வெளியாகும் தினம் பண்டிக்கை நாளாக மாறும்’ என நடிகர் அஜித்தும் இயக்குநரிடம் கூறியிருக்கிறாராம். இந்த வருடத்தின் முதல் பெரிய ஹீரோ ரிலீஸாக இப்படம் வெளியாகவிருக்கிறது. கடந்தாண்டு அஜித்தின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. `விடாமுயற்சி’ , `குட் பேட் அக்லி’ என இரண்டு படங்களிலும் பிஸியாக இருந்தார் அஜித். அந்தப் படங்களெல்லாம் வரிசையாக இந்த வருடம் வெளியாகவிருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் `விடாமுயற்சி’ திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரனின்`குட் பேட் அக்லி’ திரைப்படமும் இந்தாண்டு ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தாண்டு டபுள் ரிலீஸை கையில் வைத்திருக்கிறார் அஜித்!
தனுஷ்:
பிப்ரவரி மாதம் தனுஷ் இயக்கியிருக்கும் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் திரைக்கு வருகிறது. `ஜென்-சி’ வைப்பில் இப்படத்தை இளைஞர்களை வைத்தே தனுஷ் இயக்கியிருக்கிறார். இதுமட்டுமல்ல, இவர் இயக்குயிருக்கும் `இட்லி கடை’ திரைப்படமும் இந்தாண்டு ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. நடிகராக மட்டுமன்றி தனுஷ் இயக்குநராக களமிறங்கியிருக்கும் இரண்டு திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகிறது. மேலும், சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் `குபேரா’ திரைப்படமும் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.