இப்போது நலன் குமாரசாமியின் ‘வா வாத்தியார்’, பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி, அடுத்தடுத்து அசத்தலான லைன் அப்களை வைத்துள்ளார். ‘டாணாக்காரன்’ தமிழ், லோகேஷ் கனகராஜ், மாரிசெல்வராஜ் என அடுத்தடுத்து இயக்குநர்களை தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் கார்த்தியிடம் இப்போது `காதல் கம் ஆக்ஷன்’ படங்களை கொடுக்கும் இயக்குநரிடம் கதை ஒன்றை கேட்டு ஓகே செய்துள்ளார்.
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. கோடையில் திரைக்குக் கொண்டு வரும் திட்டமிடல்களும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. இதில் அவர் எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகராக வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை அடுத்து ‘சர்தார் 2’வின் கார்த்திக் டப்பிங் பணிகளும் தொடங்கிவிட்டன. சென்னையில் மீதி காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, ஆஷிஷ் வித்யார்த்தி, ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமான செட்கள் அமைத்து, படமாக்கி வருகின்றனர். ‘சர்தார்’ படத்தில் டபுள் ஆக்ஷன் கார்த்தியின் தோற்றம் பேசப்பட்டது போல, இதிலும் அசத்தலான லுக்குகள் இருக்கின்றன. இதுவரை 80 சதவிகித படப்பிடிப்பு நடந்திருக்கிறது என்கின்றனர். சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து மைசூரில் நடந்தது. அதன் படப்பிடிப்பில் தான் ஆக்ஷன் காட்சியின் போது, கார்த்திக்கு காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இப்போது அவர் ஓய்வில் இருக்கிறார். ஆனாலும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு இதர நடிகர்களை வைத்து போய்க்கொண்டிருக்கிறது.

இதற்கடுத்து ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படத்திற்கு வருகிறார். இது கார்த்தியின் 29வது படமாகும். இது ஒரு பீரியட் ஃபிலிம். ராமேஸ்வரம் – இலங்கை கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதையாக இந்தப் படம் இருக்கக்கூடும் என்கிறார்கள்.
அதற்கான வேலைகள் முழு வீச்சில் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. இதனை அடுத்தே லோகேஷ் கனகராஜின் ‘கைதி 2’ தொடங்குகிறது. தவிர, ‘பைசன்’ படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜும் கார்த்தியை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் இயக்குநர் கௌதம் மேனன், கார்த்தியைச் சந்தித்து லைன் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்குப் பின் கௌதம் மேனன், எழுத்தாளர் ஜெயமோகன் கூட்டணி மீண்டும் இணைகிறது என்கிறார்கள். கதை, திரைக்கதையை ஜெயமோகன் எழுதக்கூடும் என்றும், கௌதம் மேனன் இயக்கம் மட்டும் என்றும் பேச்சு இருக்கிறது. இந்தப் படம் மாரி செல்வராஜின் படத்திற்கு அடுத்தா? அல்லது ‘கைதி 2’ விற்கு பிறகா என்பது இன்னும் முடிவாகவில்லை. சூர்யாவின் ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இப்போது கார்த்தியை இயக்குவது பெரும் எதிர்பார்ப்பிற்கான படமாக அமைந்துள்ளது என்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX