கே.வி. ஆனந்த் இயக்கத்தில், சூர்யா நடித்திருந்த `அயன்’ படத்தில் முதலில் ஜீவாதான் நடிக்க வேண்டியதாம். `கற்றது தமிழ்’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் கே.வி. ஆனந்த் ஜீவாவை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் இப்படம் நடக்காமல் போனது. இத்திரைப்படத்திற்குப் பிறகு கே.வி. ஆனந்த் டைரக்ஷனில் `கோ’ படத்தில் ஜீவா நடித்தார். அருள்நிதி நடிப்பில் சாந்த குமார் டைரக்ஷனில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான `மெளனகுரு’ படத்திலும் ஜீவாதான் முதலில் நடிக்க வேண்டியதாம். அதுபோல, பா. ரஞ்சித்தின் இரண்டாவது திரைப்படமான `மெட்ராஸ்’ படத்திலும் ஜீவா நடிப்பதாக இருந்திருக்கிறது.
அட்லீ இயக்குநராக அறிமுகமான `ராஜா ராணி’ படத்தின் கதையும் முதலில் ஜீவாவிடம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அக்கதையில் ஆர்யா நடித்தார். இதன் பிறகு அட்லீ தயாரிப்பாளராக அறிமுகமான `சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் ஜீவா நடித்தார். அதுபோல, மணி ரத்னமிடமிருந்தும் ஜீவாவுக்கு அழைப்பு வந்திருகிறதாம். ஜூன் மாதம் வெளியாகவிருக்கிற `தக் லைஃப்’ படத்தில் நடிப்பதற்கு ஜீவாவை அழைத்திருக்கிறார் மணிரத்னம். அவை அந்த சமயத்தில் சரியாக அமையவில்லை என்பதையும் ஜீவா பகிர்ந்திருக்கிறார்.