`டாடா” திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக கவனம் பெற்றவர், தற்போது தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்குகிறார். படத்தில் ஜெயம் ரவியுடன் தமிழக டி.ஜி.பி ஷங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கவிருக்கிறார். நேற்று வெளியான பூஜை ஸ்டிஸ்ல் மூலம் இத்தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமல்ல, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பி. வாசுவின் மகன் ஷக்தி வாசு நடிக்கவிருக்கிறார். படத்தின் எழுத்துப்பணிகளில் இயக்குநர் ரத்ன குமாரும், எழுத்தாளர் பாக்கியம் சங்கரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
`ப்ரதர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இத்திரைப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். `டாடா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே. பாபு மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கூடிய விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தாண்டி சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கிற சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் ஜெயம் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி இசையமைக்கிறார். இது ஜி.வி-யின் 100-வது திரைப்படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.