லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துவிட்டு, தற்போது சென்னை திரும்பியுள்ளார் இளையராஜா. அவரை தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.
சிம்பொனி அரங்கேற்றம் குறித்து சென்னை விமான நிலையத்தில் இளையராஜா, “அனைவருக்கும் மிகவும் நன்றி. மிகவும் மகிழ்வான இதயத்தோடும், மலர்ந்த முகத்தோடும் நீங்கள் அனைவரும் என்னை வழியனுப்பி வைத்தீர்கள். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க இறைவன் அருள்புரிந்தான். இது சாதாரண விஷயம் அல்ல. இசையை எழுதி தந்துவிடலாம். எழுதி தந்ததை அவர்கள் வாசிக்கலாம். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வாசித்தால் எப்படி இருக்கும்?

`மூச்சு விடும் சத்தம் கூட கேட்காது’
நான் லண்டன் சென்றிருந்தப்போது ரிஹர்சலில் தான் கலந்துகொள்ள முடிந்தது. ஆனால், மிக்கேல் டாம் என்னும் கன்டெக்டர் நான் என்ன எழுதி கொடுத்திருந்தேனோ அந்த ஒவ்வொரு நோட்டையும் அருமையாக இசையாக மாற்றியிருந்தார்.
நோட்டில் சின்ன மாற்றம் இருந்தாலும் விதிமீறல் ஆகிவிடும். கன்டெக்டர் மிக்கெல் டாம் கையை தூக்கினால் 80 பேரும் சத்தமில்லாமல் இருக்க வேண்டும். மூச்சு விடும் சத்தம் கூட கேட்காது.
அப்படி அவர்கள் வாசிக்கும்போது ஒரு ஸ்வரத்திற்கு அவர் கை அசைக்கும் போது நோட்டிற்கு ஏற்ப வாசித்தார்கள். கேட்பவர்கள் எல்லாரும் மூச்சை மறந்து ‘ஆ…’ என்று ஆச்சரியத்தில் பாத்துட்டு இருந்தாங்க.
`கன்டெக்டருக்கும், அந்த 80 பேருக்கும் ஒரே ஆச்சரியம்’
ஒரு ஸ்வரத்துக்கே இப்படி என்றால் சிம்பொனி மொத்தமும் நான்கு பகுதிகளை கொண்டது. மேற்கத்திய ரூல்ஸ் படி, இந்த நான்கு பகுதிகளும் முடியும் வரை யாரும் கைதட்டமாட்டார்கள். ஆனால், நம் ரசிகர்களும், பொதுமக்களும் ஒவ்வொரு பகுதி முடியும்போது கைதட்டுகிறார்கள். கன்டெக்டருக்கும், அந்த 80 பேருக்கும் ஒரே ஆச்சரியம். கன்டெக்டர் என்னை பார்த்து சிரித்தார். அவர்களால் சந்தோஷம் தாங்க முடியவில்லை.
நம் மக்கள் அவர்களுடைய சந்தோஷத்தை உடனுக்குடன் வெளிப்படுத்துகிறார்கள். எல்லா இசை கலைஞர்களாலும் பாராட்டப்பட்ட சிம்பொனி இது.
உங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அந்த மகிழ்ச்சி இந்த நிகழ்ச்சியை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கக்கூடிய பெரிய நிகழ்ச்சியாக மாற்றியிருக்கிறது.

என்னை முதலமைச்சர் அரசு மரியாதையுடன் வரவேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் மக்கள் என்னை வாழ்த்தியது பெருமையாக இருக்கிறது. இந்த இசையை டவுன்லோட் செய்து கேட்காதீர்கள்… நான் சொன்னதை கேவலமாக கேட்காதீர்கள். இந்த இசையை நீங்கள் நேரில் கேட்க வேண்டும். அந்த அனுபவமே வேறு.
நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் என்னுடைய சினிமா பாடல்களை அவர்களை வாசிக்க வைத்து, நானும் அங்கே பாடினேன். அது கஷ்டமான காரியம். ஏனெனில், நான் தினமும் அவர்களுடன் பாடுவது இல்லை.
“’இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே’ என்று நினைப்பேன்”
இந்த சிம்பொனி இசை 13 நாடுகளில் நடக்க உள்ளது. அதற்கான நாட்கள் குறிச்சாச்சு. தமிழர்கள் இல்லாத இடங்களில் கூட இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது என் மீது பாசம் வைத்திருக்கும் மக்கள் கேட்க வேண்டாமா… என்னை கடவுள் என்றெல்லாம் என்னுடைய மக்கள் கூறுகிறார்கள். ஆனால், நான் சாதாரண மனிதனை போலத் தான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கு எந்த எண்ணமும் இல்லை. என்னை கடவுளோடு ஒப்பிடும்போது ‘இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே’ என்று நினைப்பேன். அனைத்திற்கும் நன்றி. இந்த இசையை உலகம் முழுக்க கொண்டு சேர்ப்பேன். இது ஆரம்பம்.
’82 வயசு ஆயிடுச்சு… என்ன பண்ணப் போறாரு’ என்று நினைக்காதீங்க. எந்த விஷயத்திலும் நீங்கள் நினைப்பதுப்போல நான் இல்லை. பண்ணைப்புரத்தில் இருந்து வெறும் காலில் தான் நடந்து வந்தேன். இப்போது வரை என் காலில் தான் நான் நிற்கிறேன். இதை இளைஞர்கள் முன்னுதரணமாக எடுத்துக்கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
