இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி எதற்காக..? எப்படி இயங்கும்..?

13 / 100

டிஜிட்டல் நிதியியல் சேவைகளை அனைத்து வழிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் அதேவேளையில் பாதுகாப்பான பரிமாற்றம் மற்றும் நிர்வாகத்தை நாணய சந்தையில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக உலகில் பல நாடுகள் காகித நாணயத்தை டிஜிட்டல் நாணயமாக அறிமுகம் செய்ய முயற்சி செய்து வருகிறது.

உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் டிஜிட்டல் கரன்சியை உருவாக்க திட்டமிட்டு நடந்து வரும் குளிர்காலக் கூட்டத்தில் இதற்கான மசோதா-வை தாக்கல் செய்யப்பட உள்ளது.

சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC)

இந்திய அரசால் வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சியைச் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி என அழைக்கப்படுகிறது. இது ரூபாய் நோட்டு போலவே இந்திய அரசால் அறிமுகம் செய்யப்படும் டிஜிட்டல் பணம். இந்தப் பணத்தைத் தற்போது நாம் பயன்படுத்தும் வகையிலேயே பயன்படுத்தலாம், அதேபோல் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியவை என்பதால் 100 சதவீத பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.

டிஜிட்டல் கரன்சி மசோதா

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் டிஜிட்டல் கரன்சி மசோதா ஒப்புதல் பெற்றால் ரூபாய் நோட்டு, சில்லறைக் காசுகள், காசோலைகள், பத்திரங்கள் போன்ற அனைத்தும் சென்டரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி-யாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி இயங்கும் தற்போது ஒரு கடையில் எப்படிப் பணத்தைக் கொடுத்துப் பொருட்களை வாங்குகிறோமோ, அதேபோலவே இந்த டிஜிட்டல் கரன்சியை டிஜிட்டல் மூலம் பரிமாற்றம் செய்து பொருளை வாங்க வேண்டும். மேலும் இந்த டிஜிட்டல் கரன்சியை ஸ்மார்ட்போனில் வேலெட் மூலம் சேமிக்க வேண்டியது அவசியமாகும்.

இண்டர்நெட் இல்லாமல் பேமெண்ட்

உலக நாடுகளில் டிஜிட்டல் கரன்சியை எவ்விதமான இண்டர்நெட் சேவை இல்லாமல் செலுத்தப்படுகிறது, இதேபோன்ற சேவை இந்தியாவிலும் வந்தால் இந்தியக் கிராமங்களில் எளிதாக டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவையை ஊக்குவிக்க முடியும்.

கருப்புப் பணம்

அனைத்திற்கும் மேலாக இந்திய டிஜிட்டல் கரன்சி மூலம் பணப்புழக்கத்தை எளிதாக நிர்வாகம் செய்ய முடியும் அதேபோல் கருப்புப் பணம் போன்றவற்றை எளிதாகக் கண்டுப்பிடிக்க முடியும். ஒவ்வொரு ரூபாய்க்கும் டிஜிட்டல் டிராகிங் இருக்கும் காரணத்தால் எந்தப் பணம் யாருக்குச் செல்கிறது என்பதை மிகவும் எளிதாகக் கண்டறிய முடியும்.

செலவுகள் குறைவு

இதேபோல் பணத்தை அச்சிடும் செலவுகள் நிர்வாகம் செய்யும் செலவுகள் அரசுக்குப் பெரிய அளவில் குறையும். இதனால் பணத்தை நம்பியிருக்கத் தேவையில்லை மேலும் பணப் பரிமாற்றத்தைக் குறைவான செலவில், வேகமாகவும், உள்நாட்டுப் பரிமாற்றம் முதல் வெளிநாட்டுப் பரிமாற்றம் வரையில் சுலபமாகச் செய்ய முடியும்.

பணமில்லா பொருளாதாரம்

மோடி அரசு 2016ல் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் கூறி பழைய 500 மற்றும் 1000 ரூபாயை தடை செய்த பணமதிப்பிழப்பு அறிவித்தது. இது தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படுகிறது.

சீனாவில் ஈ-யுவான்

சீனாவில் ஏற்கனவே தன் நாட்டு டிஜிட்டல் கரன்சியான ஈ-யுவான் அறிமுகம் செய்து சோதனை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது.