18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் டானாக இருக்கிறார் ஏகே (அஜித் குமார்). அவரின் அசல் ரவுடி முகம் பிடிக்காத மனைவி ரம்யா (த்ரிஷா), அவரை வெறுப்பதோடு, பிறந்த குழந்தையையும் தொட விடாமல் செய்கிறார். அதனால், தன் டான் வாழ்க்கையைத் துறந்து, சிறைக்குச் சென்று, ‘Bad’ ஏகே, ‘Good’ ஏகே ஆக மாறுகிறார்.
தற்போது சிறையிலிருந்து அவர் வெளியே வரும் சமயத்தில், அவரின் மகன் பெரிய சிக்கலில் சிக்கியிருப்பது தெரியவருகிறது. மகனின் உயிரைக் காக்க, எதிரிகளுக்கு ஏகே காட்டும் ‘Good Bad Ugly’ முகங்களே இந்தப் படம்.

குட், பேட், அக்லி என மூன்று மீட்டரிலும் அட்டகாசத்தையும், அமர்க்களத்தையும் குறைவின்றிக் கொடுத்திருக்கிறார் அஜித் குமார். மகனுக்காக எதற்கும் துணிவோடு களமிறங்குவது, தன் குடும்பத்தோடு சேர ‘விடாமுயற்சி’யுடன் செயல்படுவது என நிறைவான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் என்றாலும், மேலோட்டமான எமோஷன் காட்சிகளைத் தூக்கி நிறுத்த தவறுகிறார்.
ஏகே-யோடு சமர் புரியும் வில்லனாக அர்ஜுன் தாஸ் தன் தேர்வை நியாயப்படுத்தியிருக்கிறார். நக்கல், நையாண்டி உடல்மொழியிலும் பாஸ் ஆகிறார்.
த்ரிஷா, சுனில், பிரபு, பிரசன்னா ஆகியோர் ஆதிக் உலகத்திற்குள் அவரின் கதாபாத்திரங்களாகவே மாறி கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். எதற்கென்றே தெரியாமல் வரும் ரெடின் கிங்ஸ்லி, எப்போது வந்தார் எப்போது போனார் என்றே தெரியாதா ஜாக்கி ஷெராஃப், வந்தாரா எனக் கேட்கத் தோன்றும் யோகி பாபு என ஆங்காங்கே துணை நடிகர்கள் வந்து போகிறார்கள்.
விஹானாக கார்த்திகேயா தேவ் நடிப்பில் குறையில்லை. ஷாயாஜி ஷின்டே, சிம்ரன், டார்க்கி நாகராஜா, ஷைன் டாம் சாக்கோ எனக் கேமியோ கேரவனும் நிறைந்திருக்கிறது.

வின்டேஜ் டோனுக்கும் பேட்டர்னுக்கும், அட்டகாசமான ஆக்ஷனுக்கும் அமிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு கைகொடுத்திருக்கிறது. பரபர திரைமொழிக்கும், சின்ன சின்ன கான்செப்ட்களுக்கும் விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு கச்சிதமாகத் துடுப்பு போட்டிருக்கிறது.
ரிதமுக்கு ஏற்றவாறு எடிட் செய்யப்பட்டிருக்கும் அந்த பார் சண்டைக் காட்சி மிரட்டல்! ஜி.வி.பிரகாஷ் இசையில் விஷ்னு எடவன் வரிகளில் ‘திரையரங்கம் செதறட்டும்’ பாடல் சொன்னதைச் செய்திருக்கிறது.
ஒரு பக்கம் பின்னணி இசை, இன்னொரு பக்கம் பழைய பாடல்களுக்கான ரீமிக்ஸ் என ரெட்டை ஜடையைத் துள்ளலாகப் பின்னியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அதேநேரம், பழைய ரீமிக்ஸ் பாடல்கள் அளவிற்கு மீறி ரிப்பீட் அடிப்பது அயற்சி!
தயாரிப்பு வடிவமைப்பாளர் ஜி.எம். சேகர், சண்டைப் பயிற்சியாளர்கள் சுப்ரீம் சுந்தர், கலோயன் வோடெனிச்சரோவ், ஸ்டைலிஸ்ட் அனு வர்தன், ராஜேஷ் காமராசு ஆகியோரின் ஓவர் டைம் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. கதை நடக்கும் உலகத்திற்கும், ஏகே-வின் கதாபாத்திரத்திற்கும் ஆடை வடிவமைப்பு மைலேஜ் கூட்டியிருக்கிறது.

பழைய டான், குடும்பத்திற்காகத் திருந்துவது, மீண்டும் குடும்பத்திற்காக டான் கோட்டை மாட்டுவது என்ற கதையே இல்லாத கதையை, நான்கு அடிக்கு நாற்பது அஜித் பட ரெஃப்ரன்ஸ்களை வைத்து, அஜித் ரசிகர்களுக்கான ஒரு ஃபேன் பாய் சம்பவமாகப் பரிமாற முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
முதல் ஃரேமிலிருந்தே கதைக்குள் நுழைகிறது படம். ஏகே-விற்கான பில்டப், ஆதிக் ரவிச்சந்திரனின் திரைமொழி, பரபர எடிட்டிங் என ஒரு ஃபுல் மீல்ஸுக்கான ஸ்டார்ட்டர் பேக்காக தொடக்கம் கவர்கிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே எச்சச்சக்க பில்டப் வசனங்கள், அதீத அஜித் ரெஃப்ரன்ஸ், லாஜிக்கே இல்லாத காட்சிகள் எனச் சோதனைச் சாலையில் பயணிக்கத் தொடங்குகிறது படம்.
“வரலாற்றுக்கே வரலாறா”, “தல தெரியலயே”, “அமர்க்களம், அட்டகாசம்…” வகையறா வசனங்களை இறுதிக்காட்சி வரை நிரப்பியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இதனால், ஒரு சில மாஸ் மெமன்ட்களும் இந்த வசன பூஜைக்கு இடையில் காணாமல் போகின்றன. இந்த ஓவர் டோஸ் ரெஃப்ரென்ஸ்கள் உண்மையிலேயே ஒர்க் அவுட் ஆகியிருக்க வேண்டிய ரெஃப்ரென்ஸ்களையும் நசுக்கிவிடுகின்றன.

இவற்றைத் தாண்டி, இடைவேளை காட்சி, ஏகே – அர்ஜுன் தாஸ் உரையாடல், ரவுடிகளின் வாட்ஸ்அப் க்ரூப் காட்சி போன்ற சில காட்சிகள் கச்சிதமாகக் கைகொடுக்க, திரையரங்கம் சிதறுகிறது.
இரண்டாம் பாதியில் அஜித் குமாரின் வரலாற்றைச் செல்லும் மாஸ் காட்சித் தொகுப்பு, அஜித் குமார் ரெஃப்ரன்ஸ்களோடு, உலக டான்களின் ரெஃப்ரன்ஸ்களையும் சேர்த்துச் சொல்லும் காட்சிகள் தியேட்டர் மெட்டீரியலாக ப்ளாஸ்ட்! ஆனால் அதையும் ஹெவி டோஸாக்கி, அதீதமாகச் சேர்த்து வீணடித்திருக்கிறார்கள். இந்த இடர்பாடுகளுக்குள் கதையையும், திரைக்கதையையும் சல்லடை போட்டுத் தேட வேண்டியதாக இருக்கிறது.
பழைய ஹிட் பாடல்கள் சிடி-யைத் தேயத் தேயப் பயன்படுத்தியது, சிம்ரன், த்ரிஷா பட ரெஃப்ரன்ஸ்கள் என ஒவ்வொரு சீக்வன்ஸும், ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு ஃப்ரேமும் மேற்கோள்கள் கொண்டே செதுக்கியிருப்பதும், படத்தின் எமோஷனிலிருந்து முற்றிலும் நம்மை விலக வைத்துவிடுக்கிறது.

சில எமோஷன் காட்சிகள் சீரியஸாகவே வந்தாலும், அவற்றின் வசனங்கள் ஸ்பூஃப்பாக அணுகப்படுவதால் அது ஏற்படுத்திய வேண்டிய தாக்கம் மறைந்து போகிறது. எழுத்தில் ஆழம் சேர்த்து, நாயகன் ரெஃபரன்ஸ்களைக் குறைத்திருந்தால் ‘குட்’ வைப்ஸ் கிடைத்திருக்கும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX