அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் `குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி பலராலும் கொண்டாடப்பட்டது. இத்திரைப்படத்திற்கு முதலில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தது. அதன் பிறகு, படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் கமிட் செய்யப்பட்டார். ஜி.வி எப்போதும் தான் பணியாற்றும் திரைப்படங்கள் பற்றி தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருவார். இதுதான் ஜி.வியின் வழக்கமான அப்டேட் ஸ்டைல்!
ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ஜி.வி-யை டேக் செய்து `குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்து கேட்டு வந்தனர். நேற்றைய தினம் அந்தக் கேள்விகளுக்காக ஒரு பதிவிட்டிருந்தார் ஜி.வி. அவர், “ ஒ.ஜி சம்பவம் என்பதுதான் குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிளின் பெயர். பாடல் தயாராகி வருகிறது. கொளுத்துறோம் மாமே!” எனப் பதிவிட்டிருந்தார். இன்றைய தினம், “ ஓ.ஜி சம்பவம் பாடல் இறுதிக்கட்ட ஒலிப்பதிவில் இருக்கிறது. சம்பவம் இருக்கு!” என மற்றுமொரு பதிவிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்திருக்கிறார் ஜி.வி.