ஆர்ப்பாட்டமில்லாத திரைமொழியோட்டத்திற்குக் கைகொடுத்திருக்கிறது பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு.
சத்யா.சி-யின் இசையில் பாடல்கள் எதுவுமே நம் காதுகளுக்கு கம்பெனி கொடுக்கவில்லை.
ஆக்ஷன், பரபர காட்சிகள், காமெடி சீக்வென்ஸ் போன்றவற்றில் பின்னணி இசை ஆங்காங்கே பட்டாசாக வெடிக்கிறது.
ஊரின் கதை, பள்ளியின் கதை, கதாபாத்திர அறிமுகம் என நிதானமாக நகர்ந்தாலும், யூகிக்கும்படியான காட்சிகள், லாஜிக் ஓட்டைகள், அதிகம் அழுத்தமில்லாத காட்சிகளால் சிறிது சோர்வையும் சேர்த்தே தருகிறது திரைக்கதை.
தொடக்கத்தில் வரும் வடிவேலுவின் பழைய பாணியிலான சில காமெடி காட்சிகளும் ஓகே ரகமாகவே தப்பிக்கின்றன.
‘சுந்தர்.சி-யின் சினிமாடிக் யுனிவர்ஸ்’ முழுமையாகத் தொடங்கியவுடன், இப்பிரச்னைகள் மறையத் தொடங்குகின்றன.
முனீஸ்காந்த் – வடிவேலு காட்சிகள், வில்லன்களிடம் வடிவேலு மாட்டும் காமெடிகள் எனச் சில காமெடித் தொகுப்புகளும், சின்ன சின்ன காமெடிகளும் முதல் பாதியைக் காப்பாற்றுகின்றன.

இரண்டாம் பாதிதான் திருப்பங்கள், பின்கதை, சென்டிமென்ட், காமெடி, பாடல் என கம்ப்ளீட் பேக்கேஜாக மாறுகிறது.
பிரதான கதாபாத்திரங்கள் ‘கேங்கர்ஸ்’ ஆக உருவாகும் இடம், அவர்களுக்கு வரும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் இடங்கள், வடிவேலு வெவ்வேறு கெட் அப்களில் காமெடி கதகளி ஆடும் தொகுப்புகள் என எக்கச்சக்க காமெடி எபிசோடுகள் இரண்டாம் பாதியை ஃபுல் மீல்ஸாக மாற்றியிருக்கின்றன.