சென்னையில் இன்று மற்றும் நாளை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, ‘மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு’ என்ற கருத்தரங்கை நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக திரை நட்சத்திரங்கள் கமல்ஹாசன், த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்ட ‘ஃபயர்சைட் சாட்’ நிகழ்ச்சி நடந்தது.
நடிகர் கமல்ஹாசன் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, “இப்போது இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம். தொழில்நுட்பம் தாமதமானதால் அதன் விளைவுகளும் தாமதாமகிறது. ஓ.டி.டி 2012-ம் ஆண்டே வந்திருக்கலாம்.
இந்தியர்கள் எளிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்வார்கள்… அதில் ஒன்றிக்கொள்வார்கள். சென்னையில் இருக்கும் நான் முதலில் ப்ளூடூத்தை பயன்படுத்தவில்லை. விருமாண்டி படத்திற்காக நான் அலைந்துகொண்டிருந்தப்போது பரமக்குடியில் இருப்பவர் ப்ளூடூத்தை பயன்படுத்திக்கொண்டிருந்தார்.

ஏ.ஐ போன்று எதுவாக இருந்தாலும், இந்தியர்களுக்கு கொடுத்தால் போதும், அவர்கள் அதை அழகாக பயன்படுத்தி கொள்வார்கள்.
நானும், மணிரத்னமும் எப்போதும் இணைந்து பணிப்புரிய ரெடியாகத்தான் இருந்தோம். காரணம், நாங்கள் இரண்டு பேரும் இணையும்போது, அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதனால் தான் நாயகனுக்கு பிறகு இவ்வளவு தாமதம்.
ஹே ராம் த்ரில்லர், வரலாற்று படம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எனக்கு நான் காந்தியை பற்றி படம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். நான் என் அப்பா சொல்லி கொடுத்து காந்தியை கற்கவில்லை. அவருக்கு முன்பே, காந்தியை கற்றவன் நான்.
எனக்கு காந்தியை மிகவும் பிடிக்கும். ஆனால் காந்தி, கூடவே பெரியார் என இருவருக்கும் சினிமா பிடிக்காது. இந்த விஷயத்தில் மட்டும் நான் இருவரையும் மன்னிக்கவே மாட்டேன்.