ஒரே சமயத்தில் நடிப்பு, இயக்கம் என இரண்டு டிராக்கிலும் அதிரடியாகக் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். ‘ராயன்’ படத்திற்குப் பின் இரண்டு படங்கள் இயக்கி வருகிறார். ஒன்று ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, மற்றொன்று ‘இட்லி கடை’. ‘குபேரா’ படப்பிடிப்பிற்கிடையே மேற்கண்ட இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஜெட் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன.
சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படப்பிடிப்பிற்கு இடையேதான் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்க ஆரம்பித்தார். அவரது அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ரம்யா எனப் பலரும் நடித்து வருகின்றனர். தயாரிப்பும் தனுஷ்தான். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் இசை என நல்ல டீமும் அமைந்துள்ளது.
அதன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு மீதமிருக்கும் நேரத்தில் தான் ‘இட்லி கடை’யை ஆரம்பித்தார் தனுஷ். இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மெனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே எனப் பலரும் நடித்து வருகிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு தேனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்தது. ஒரு பாடல் காட்சியை மேகமலையில் எடுத்துள்ளனர். இன்னொரு பாடலை பொள்ளாச்சியில் படமாக்கியுள்ளனர்.
‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்குப் பின் தனுஷ்- நித்யாமெனன் ஜோடியாக நடிக்கும் இப்படம், அதைப் போல ஒரு ஃபீல் குட் படமாக இருக்கும் எனத் தகவல். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ஷோபனாவாக வாழ்ந்திருப்பார் நித்யா மெனன். அந்த கேரக்டரை விடப் பல மடங்கு வலுவான ஷோபானவை ‘இட்லி கடை’யில் பார்க்கலாம் என்கின்றனர்.
‘இட்லி கடை’யில் மூன்றாவது ஷெட்யூலுக்கு முன்னர், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார் தனுஷ். சமீபத்தில் அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இது தனுஷின் 55வது படமாகும். ‘அமரன்’ வெற்றிக்குப் பின் ராஜ்குமார் இயக்கி வரும் இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு ஒரு பக்கம் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்கின்றனர். ராஜ்குமார் ‘அமரன்’ படத்தைத் தொடங்கும் முன்னரே, தனுஷ் படம் முடிவானது. இப்போது ‘அமரன்’ படத்தின் வெற்றியால், ராஜ்குமார் படத்தை அறிவித்துவிட்டனர். டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் ‘இட்லி கடை’ படப்பிடிப்புக்குக் கிளம்புகிறார் தனுஷ் என்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX