பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் இரவு தன் 81 -வது வயதில் உயிரிழந்தார். அவரது உடல் ராமாபுரத்தில் இருக்கும் அவரின் வீட்டில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது.
திரைத்துறை, அரசியல் பிரபலங்கள் அவருக்கு இறுதி மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து அவரின் உடல் இறுதிச்சடங்குக்காக நெசப்பாக்கம் மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், டெல்லி கணேஷின் உடலுக்கு இறுதி மரியாதை செய்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற டெல்லி கணேஷ் இப்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது. நாடகம் முதல் சின்னத் திரை வரை அனைத்திலும் பணியாற்றி மக்களின் வரவேற்பைப் பெற்றவர்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் என்னுடைய தனிப்பட்ட நண்பர். என் வீட்டில் நடக்கும் எந்த விஷேசத்துக்கும் மறக்காமல் வந்துவிடுவார்.என் மீது தனிப்பட்ட முறையில் பெரும் அபிமானம் உடையவர். அவரின் மறைவு எனக்கும் இழப்பு. அவருடைய மறைவால் பாதிக்கப்பட்ட திரையுல நண்பர்கள், குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.