மதுரையில் நடந்த இயக்குநர் அருண்குமாரின் திருமண நிகழ்வில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குநர் அருண்குமாருக்கும், அஸ்வினி என்பவருக்கும் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.
இந்த திருமண நிகழ்வில் நடிகர்கள் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் சசி உள்பட திரையுலகினர் மணமக்களை வாழ்த்தினர்.
நடிகை துஷாரா விஜயன், நடிகர் பால சரவணன், தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்,
விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படத்தினை இயக்கியுள்ளார் அருண்குமார்.
2014-ம் ஆண்டு வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண்குமார். இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது.
விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’ படத்தினை இயக்கினார் அருண்குமார். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த ‘சிந்துபாத்’ படத்தினை இயக்கினார் அருண்குமார். அப்படம் பெரும் தோல்வியை தழுவியது.
பின்னர், சிறு இடைவெளி எடுத்து சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படத்தினை இயக்கினார். அப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.
‘சித்தா’ படத்தினைத் தொடர்ந்து, தற்போது விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படத்தினை இயக்கியுள்ளார். ‘வீர தீர சூரன்’ டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.