பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல் நடித்த சாவா படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
படம் கடந்த 14ம் தேதி வெளியான நிலையில் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டது. மராத்தியர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ரசிகர்கள் படம் வெளியான போது எப்போதும் இல்லாத வகையில் சாவா படத்தின் போஸ்டருக்கு பாலபிஷேகம் செய்தனர். இது போன்று மும்பை ரசிகர்கள் மிகவும் அபூர்வமாகத்தான் செய்வார்கள். நாக்பூரில் சாவா படம் ஒரு தியேட்டரில் ஓடியது. படம் முடிந்து எழுத்து ஓடிக்கொண்டிருந்த போது சத்ரபதி சாம்பாஜி மகாராஜா போன்ற வேடம் அணிந்த ஒருவர் குதிரையில் தியேட்டருக்குள் வந்தார்.
அதனைப் பார்த்தவுடன் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். வழக்கமாக ஒரு உணவுப்பொருட்களைக்கூட உள்ளே அனுமதிக்காத தியேட்டர் நிர்வாகம் எப்படி குதிரையை அனுமதித்தார்கள் என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். தியேட்டரில் படம் ஓடிய திரை முன்பாக குதிரையில் அந்த நபர் வந்து நின்று அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். உடனே ரசிகர்கள் தங்களது மொபைல் போனில் அதனை வீடியோ எடுத்தனர். இக்காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது. சமீபத்தில் விக்கி கெளஷல் நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகச் சாவா அமைந்திருக்கிறது.