பலருக்கும் பேவரைட்டான திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுவதுதான் தற்போதைய ட்ரெண்ட்! இப்படியான டிரெண்ட் பார்முலாவை தொடர்ந்து பல திரைப்படங்களும் தொடர்ந்து ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த வாரமும் ரவி மோகனின் `எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி”, சிவகார்த்திகேயனின் `ரஜினி முருகன்’ போன்ற திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டன. இந்த வாரமும் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில், ஆர்யா, சந்தானம் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான `பாஸ் (எ) பாஸ்கரன்’ திரைப்படம் ரீரிலீஸாகிறது.

சந்தானத்தின் காமெடி, ஆர்யா – நயன்தாரா காம்போ எனப் படத்தில் பல ஹைலைட்டான விஷயங்கள் இருக்கிறது. இதனைத் தாண்டி படத்தைப் பற்றி பலரும் அறிந்திடாத ஒரு சுவாரசியமான தகவலை விகடன் பிரஸ் மீட்டில் நடிகர் ஜீவா பகிர்ந்திருந்தார். `சிவா மனசுல சக்தி’ திரைப்படத்திற்குப் பிறகு ஜீவாவிடம் இயக்குநர் ராஜேஷ் மற்றுமொரு படம் இணைந்து பண்ணலாம் என முதலில் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைப்பதற்குப் படத்தின் தயாரிப்பாளர் ஜீவாவின் பெயரையும் ஆர்யாவின் பெயரையும் சீட்டில் எழுதிக் குலுக்கி போட்டுப் பார்த்தாராம். அதில் ஆர்யாவின் பெயர் வந்ததால் இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு ஆர்யாவின் பெயரை டிக் அடித்துவிட்டார்களாம்.
ஆர்யா பற்றி ஜீவா கூறுகையில், “இப்படியான சம்பவம் நடந்ததுன்னு எனக்குத் தெரிஞ்சதுக்குப் பிறகு ரெண்டு சீட்டுலையும் நம்ம பெயரை எழுதி போட்டிருக்கலாம்லனு சொன்னேன் (சிரித்துக் கொண்டே..). ஆனால், ஆர்யாவுக்கு இந்த மாதிரி ஒரு அழகான படம் அமைஞ்சதுல எனக்குச் சந்தோஷம்தான்” என்றார்.