அட்லி குறித்தான பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பி இருக்கிறது.
அட்லி தயாரிப்பில் உருவாகியிருக்கிற பாலிவுட் திரைப்படமான `பேபி ஜான்’ கிறிஸ்துமஸ் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் 2016-ம் ஆண்டு வெளியான `தெறி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக். இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார் அட்லி. அப்படி புரோமோஷனுக்காக கபில் ஷர்மாவின் நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார் அட்லி.

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கபில் ஷர்மா அட்லியின் வெளித்தோற்றத்தை கேலி செய்யும் வகையில் ஒரு கேள்வி எழுப்பினார். அவர், “ என்றைக்காவது கதை சொல்ல போகும்போது யாரேனும் உங்களை அடையாளம் தெரியாமல் உங்களிடம் `அட்லி எங்கே?’ எனக் கேட்டிருக்கிறார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அட்லி, “ என்னுடைய முதல் திரைப்படத்தைத் தயாரித்தது இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சார்தான். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னுடைய திறமையையும், நான் கதை சொல்லும் விதத்தையும்தான் கவனித்தார். என்னுடைய உருவத்தையும் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு நான் தகுதியானவனா என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. யாருடைய வெளிதோற்றத்தை வைத்தும் அவர்களை எடை போடக்கூடாது. அவர்களின் மனதைதான் பார்க்க வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.

பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து அட்லி `ஜவான்’ திரைப்படத்தை இயக்கிய பிறகு பாலிவுட்டிலும் அட்லிக்கான மார்கெட் அதிகரித்திருக்கிறது. அடுத்தும் பாலிவுட்டின் உச்ச நடிகர் ஒருவரை வைத்து படமெடுக்கப் போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
கபில் ஷர்மாவின் இந்தக் கேள்விக்கு சமூக வலைதளப் பக்கங்களில் அவரை டேக் செய்து பலர் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். அப்படி ஒருவர், அந்தக் குறிப்பிட்ட பகுதி வரும் காணொளியை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவருக்கு கபில் ஷர்மாவும் பதில் கொடுத்திருக்கிறார்.
Dear sir, can you pls explain me where n when I talked about looks in this video ? pls don’t spread hate on social media thank you. (guys watch n decide by yourself, don’t follow any body’s tweet like a sheep). https://t.co/PdsxTo8xjg
— Kapil Sharma (@KapilSharmaK9) December 17, 2024
அவர், “இந்தக் காணொளியில் நான் எங்கு? எப்போது? தோற்றம் குறித்து பேசினேன் என எனக்கு விளக்கம் கொடுக்கிறீர்களா? தயவு செய்து சமூக வலைதளப் பக்கங்களில் வெறுப்பை பரப்பாதீர்கள். இந்தக் காணொளியைப் பார்த்து நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். ஆடு போல மற்றவர்களின் ட்வீட்டை பின்பற்றாதீர்கள்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
