பாலிவுட் திரையுலகில் நடிகர்களைக் கலாய்ப்பது என்பது சாதாரணமாக நடந்து வரும் விஷயம். நிகழ்ச்சிகளில், நேர்காணல்களில் போகிற போக்கில் சர்ச்சைகளுக்காகவே சில கேள்விகளை, ட்ரோல்களை செய்வது நீண்ட நாள்களாகவே அங்கு அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.
சல்மான் கான் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மானை “ஆவரேஜாக மியூசிக் போட்டிருக்கிறார்’ என்று கிண்டல் செய்திருப்பார். நடிகர் மாதவனையும் இதுபோலவே விருது விழா ஒன்றில் கலாய்த்திருப்பார்கள். இது சாதாரண கிண்டல்தான். இருப்பினும், பார்ப்பதற்கு முகம் சுளிக்கும் வகையில் இருக்கும். இது தொடர்பான காணொலிகள் பலவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியிருக்கிறது.
அவ்வகையில் தற்போது பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ பட நேர்காணல் ஒன்றில் இயக்குநர் அட்லியின் வெளித்தோற்றத்தைக் குறிப்பிட்டு, “யாருக்காவது நீங்கள் கதை சொல்லப் போகும்போதோ, சந்திக்கப் போகும்போதோ உங்களைப் பார்த்து அடையாளம் தெரியாமல் உங்களிடமே ‘அட்லி எங்கே?’ என்று கேட்டிருக்கிறார்களா?” என்று அட்லியிடம் கேள்வி கேட்கப்பட்டது.