சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தரும் செய்தியாக வெளியானது அவரின் மனைவியின் விவாகரத்து அறிவிப்பு. இது தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும்போதே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றும் பாடகி மோகினி டே தன் கணவர் மார்க் ஹர்ட்சுவை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் குறித்து சில தகவல்கள் வதந்திகளாக பரப்பப்பட்டது. இது தொடர்பாக , ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன், “என் தந்தை அவரின் வியக்கத்தகு திறமைக்காக மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை, பிறர் மீதான அன்பிற்காகவும் புகழப்படும் ஒரு லெஜெண்ட்.
ஆனால், அவர் குறித்து தவறான, ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்க்கும்போது வருத்தமளிக்கிறது. ஒருவரின் வாழ்க்கை குறித்து விமர்சிக்கும்போது, நாம் அனைவரும் அவர்களின் தனியுரிமை, அந்த விமர்சனத்தின் உண்மைதன்மை, விமர்சனத்துகுரியவரின் மரியாதை ஆகியவற்றையும் நினைவில் கொள்வோம். தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் குழு சமூக ஊடகங்களுக்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், “எங்கள் கட்சிக்காரர் விவாகரத்துக் குறித்த முடிவுக்கு தங்களின் வருதத்தையும், ஆறுதலையும் கொடுத்த நலம் விரும்பிகளுக்கு அவரின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சில சமூக ஊடகத் தளங்களும், பல யூ-டியூபர்களும் எங்கள் கட்சிக் காரரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தங்களின் சொந்தக் கற்பனைக் கதைகளுடன், அவதூறாகப் பதிவிடத் தொடங்கியிருக்கிறார்கள். இது எனது வாடிக்கையாளரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதோடு, அவரது குடும்பத்தாரையும் புண்படுத்தும். இந்த நோக்கம் கொண்ட எந்தவொரு நேர்காணல்களிலும், பதிவிலும் சிறு துளியும் உண்மை இல்லை என்பதை தெரிவிக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
எனது வாடிக்கையாளரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் சமூக ஊடக நபர்கள், அவர்களின் மலிவான குறுகிய கால விளம்பரத்திற்காக எனது வாடிக்கையாளரை அவதூறு செய்ய கற்பனையான கதைகளை உருவாக்குகிறார்கள். அதுபோன்ற பதிவுகள் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானவை என்பதையும் உணர வேண்டும். எனவே, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அதிகபட்சம் 24 மணி நேரத்துக்குள் அந்த ஆட்சேபனைக்குரிய பதிவுகளை அகற்றும்படி எனது கட்சிக் காரர் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறார். இல்லையென்றால், பாரதீய நியாயா சன்ஹிதாவின் 356வது பிரிவின் கீழ் தகுந்த குற்றவியல் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த சட்ட விதியின் கீழ் குற்றவாளிகள் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்கள். மேலும், ஊடகங்களுக்கு தவறான தகவல்களைப் பகிர்ந்தவர்களுக்கு எதிராக பொருத்தமான சிவில் நீதிமன்றத்தில் உரிய அவதூறு வழக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு குறிப்பாக யூடியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ஆன்லைன் செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட தளங்களில் இயங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MadrasNallaMadras