‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிச.4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் மனைவி ரேவதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரீமியர் ஷோ பார்க்க ரசிகர்கள் குவிந்து தள்ளு முள்ளு ஏற்பட, அந்தச் சூழலில் அந்தத் திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால் ரசிகர்கள் கூட்டம் இன்னும் ஆக்ரோஷமானது. தகவல் அறிந்து வந்த கூடுதல் காவல்துறையினராலும் இக்கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கரின் மனைவி ரேவதி (39) உயிரிழந்தார். அவரது மகன்(9) தற்போது கவலைக்கிடமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
உயிரிழந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் பணமும், சிகிச்சைப் பெற்று வரும் 9 வயது சிறுவரின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவதை திரையரங்க உரிமையாளர்கள் முன்கூட்டியே காவல்துறைக்குத் தெரிக்கவில்லை என்பதுதான் இந்தச் சம்பவத்தில் பெரும் பிரச்னையாகியுள்ளது. திரையரங்கத்தினர் முன்கூட்டியே காவல்துறைக்குத் தகவல் கொடுத்திருந்தால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு கூட்டத்தை முறையாக கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதன் அடிப்படையில் முறையாக தகவல் கொடுக்காத திரையரங்க உரிமையாளர்கள் மீதும், முன் அறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்தாக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. மேலும், ரேவதி (39) உயிரிழந்தது தொடர்பாகவும் திரையரங்க உரிமையாளர்கள் மீதும், நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு புறம், திரையரங்கத்தினர் முன்கூட்டியே விஐபிக்கள், பிரபலங்கள் திரையரங்கிற்கு வருவதாக காவல்துறையிடம் தெரித்துவிட்டதாகக் கூறுகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று காலை நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஹைதராபாத், சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். வீட்டிலிருந்தபடி அவரை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் காணொலி வெளியாகி பேசுபொருளாகியிருந்தது. காவல்துறையினரின் வழக்கமாக மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல்துறை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சந்தியா திரையரங்க உரிமையாளர்களும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்துப் பேசியிருக்கும் அட்லியின் தெறி பட ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் வருண் தவான், “ரசிகர்கள் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகமான நிகழ்வுதான். அது ஒரு எதிர்பாராத நிகழ்வு. அதற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இந்த அசாம்பாவித்திற்கு அங்கிருந்த அனைவரும்தான் பொறுப்பு. ஒரு நடிகர் தலைமேல் மொத்த குற்றத்தையும் போடக்கூடாது. ஒருவரை மட்டும் குற்றம் சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமல்ல” என்று பேசியிருக்கிறார்.