அஜித் குமார் நடிப்பில் நாளை (பிப்.6) ரிலீஸாகும் ‘விடாமுயற்சி’ படத்தையொட்டி, ரசிகர்களின் பங்களிப்பாக ‘AK Anthem’ என்ற சிறப்பு பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடா முயற்சி’ படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது, ஹாலிவுட்டின் ‘பிரேக்டவுன்’ படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம்.
இந்தப் படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவிலும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பல சாதனைகளை படைத்துள்ளது.
நாளை (பிப். 6) படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதால், படத்தின் ப்ரொமோஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இன்று காலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடேக்ஷன்ஸ் ‘விடாமுயற்சி’ படத்துக்காக ‘AK Anthem’ என்ற சிறப்பு பாடலை வெளியிட்டது. இப்பாடலில் அஜித் குமார் கார் ரேசில் ஈடுபட்ட காட்சிகள் அனிமேஷன் வடிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பாடலுக்கு மோனிஷ் இசையமைத்துள்ளார். ஹைடி கார்த்தி மற்றும் மோனிஷ் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். அஜித் ரசிகர்கள் இப்பாடலை டிரெண்ட் செய்து வருகின்றனர்.