துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார் போர்ச்சுக்கலில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் அஜித் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித் கலந்துக்கொண்டிருந்தார். அந்தப் போட்டியில் அஜித்தின் ரேஸிங் அணி 3வது இடத்தைப் பிடித்திருந்தது. பலரும் அஜித்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அஜித் தற்போது போர்ச்சுக்கல் சென்றிருக்கிறார். அங்கு நடைபெற்று வரும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரின்ட் கார் ரேஸிங் தொடரில் கலந்துகொண்டுள்ளார்.
இந்தத் தொடரின் முதல் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் 4.653 கி.மீ அளவிலான பந்தய தூரத்தை, 1.49.13 லேப் டைமிங்கில் அஜித் நிறைவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “நிறைய ரசிகர்கள் ரேஸைப் பார்க்க நேரில் வந்திருந்தார்கள்.
நான் சொல்லும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் எல்லோரும் சந்தோஷமாகவும்,ஆரோக்கியமாகவும் மன நிம்மதியுடனும் வாழ கடவுளை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் குடும்பத்தை பாருங்கள். நன்றாக படியுங்கள். கடுமையாக உழையுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயத்தை பண்ணுங்க.
நமக்கு பிடித்த விஷயத்தில் கலந்துகொள்ளும்போது வெற்றி அடைந்தால் நல்ல விஷயம். வெற்றி அடையாவிட்டாலும் சோர்ந்து விடாதீர்கள். ‘LOVE YOU ALL’ என்று பேசியிருக்கிறார்.