அவர் மேலும் கூறுகையில், ”எனது 60 வயதில் திருமணம் மகிழ்ச்சியை கொடுக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனது முன்னாள் மனைவிகளுடன் சிறந்த உறவுகளைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டம். கெளரி ஒரு சில படங்களை மட்டுமே இது வரை பார்த்திருக்கிறார். எங்களது உறவால் எங்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்” என்றார்.
மேலும், `கெளரி 6 வயது மகனுக்கு தாயாவார். அதோடு கெளரி பாதி தமிழ் ஆவார். பாதி ஐரிஸ் இனத்தைச் சேர்ந்தவர். கெளரியின் தாத்தா சுதந்திரப்போராட்ட வீரர்’ என்று ஆமிர் கான் தெரிவித்தார்.

திருப்தியளிக்காத இரண்டு காதல் திருமணங்கள்
ஆமிர் கான் முதன் முதலில் ரீனா தத்தா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1986-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் 16 ஆண்டுகள் கழித்து 2002-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இருவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் இப்போதும் ஆமீர் கானின் அரவணைப்பில் அவருடன் சேர்ந்துதான் வசிக்கின்றனர். ஒரே கட்டிடத்தில் வேறு வேறு வீட்டில் வசிக்கின்றனர். ரீனா தத்தாவுடன் ஆமீர் கான் இன்னும் நல்ல நட்பில்தான் இருக்கிறார்.
2005-ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரை 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். இத்தம்பதிக்கு ஆஷாத் என்ற மகன் இருக்கிறார். கிரண் ராவுடனும் ஆமீர் கான் நல்ல உறவை பராமரித்து வருகிறார். இரண்டு காதல் திருமணம் திருப்தியளிக்காத நிலையில் இப்போது மூன்றாவதாக லிவ் இன் உறவில் புதிய காதலியுடன் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார் ஆமிர் கான்.