என்னை நம்பிய முதல் ஸ்டார் அஜித் தான் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் வெங்கட்பிரபு. அதில் அஜித் மற்றும் ‘மங்காத்தா 2’ குறித்த கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு, “’மங்காத்தா 2’ குறித்து தெரியவில்லை. ஆனால், அப்படத்தின் மீது அனைவருக்கும் ஆசை இருக்கிறது. அதன் 2-ம் பாகம் பண்ணலாமா அல்லது வேறு படம் பண்ணலாமா என்று தெரியவில்லை.
ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் போது, வேறு எந்தப் படமும் ஓடாத போது அஜித் சார் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார் என்றார். அதே போல் தான் நானும் ‘சென்னை 28’, ‘சரோஜா’ மற்றும் ‘கோவா’ என 3 படங்கள் பசங்களை வைத்து தான் இயக்கியிருந்தேன். அந்த சமயத்தில் என்னை அழைத்தும் வாய்ப்பு கொடுத்தது அஜித் சார் தான்.
என்னை நம்பிய முதல் ஸ்டார், சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், தல, ஏ.கே மட்டுமே. என்னை நம்பிய முதல் ஹீரோ அவர் தான். அவர் எப்படி தேர்ந்தெடுப்பார் என்பது எல்லாம் தெரியாது. ’சென்னை 28’ முடிந்த பின்பே என்னை 2-3 தயாரிப்பாளர்களிடம் அனுப்பினார்கள். ஆனால், ஏதோ காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது அனைவரும் மாதிரியே ‘ஐ யம் வெயிட்டிங்’” என்று தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணையவில்லை. சமீபமாக அஜித் – வெங்கட்பிரபு இணைந்து படம் பண்ண இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.