சிக்கந்தர் விமர்சனம்: ராஜா கதையல்ல, ராஜா காலத்து கதை; எல்லா சீனையும் சாமிக்கு விட்டுட்டா எப்டிஜி?

சிக்கந்தர் விமர்சனம்: ராஜா கதையல்ல, ராஜா காலத்து கதை; எல்லா சீனையும் சாமிக்கு விட்டுட்டா எப்டிஜி?


ராஜ்கோட்டின் கடைசி மகாராஜாவாக இருக்கிறார் மக்களால் ‘சிக்கந்தர்’ என்றழைக்கப்படும் சஞ்சய் (சல்மான் கான்). அவருடைய மனைவியாக அன்பு மழையைப் பொழிகிறார் ராணி சாய்ஶ்ரீ (ராஷ்மிகா மந்தனா).

அமைச்சர் ராகேஷின் (சத்யராஜ்) மகன் துன்புறுத்தும் பெண்ணைக் காப்பாற்ற முயல்கிறார் சஞ்சய். அதனால் அமைச்சரின் பகையையும் சம்பாதிக்கிறார்.

சஞ்சயைப் பழிவாங்கத் துடித்துப் பல முயற்சிகளைத் தனது ஆட்கள் மூலமாக முன்னெடுக்கிறார் அமைச்சர். இந்த முயற்சியில் எதிர்பாராத விதமாக அடிபட்டு சஞ்சயின் மனைவி சாய்ஶ்ரீ உயிரிழந்துவிடுகிறார்.

அவர் இறந்த பிறகு அவருடைய உடலுறுப்புகள் மூன்று நபர்களுக்குத் தானம் செய்யப்படுகின்றன.

Sikandar Movie Review
Sikandar Movie Review

அந்த மூன்று நபர்களைப் பத்திரமாகக் கவனித்துக் கொள்கிறார் சஞ்சய். மீண்டும் ராகேஷுக்கும் சஞ்சய்க்குமான மோதலில் ராகேஷின் மகன் உயிரிழந்துவிடுகிறார்.

பழிவாங்கும் எண்ணத்தோடு களமாடும் ராகேஷ், சாய்ஶ்ரீயின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கும் அந்த மூன்று நபர்களைக் கொலை செய்யத் துணிகிறார்.

அந்த மூன்று நபர்களையும் சஞ்சய் பாதுகாத்தாரா, பகை எண்ணம் கொண்ட அமைச்சர் என்ன ஆனார் போன்ற கேள்விகளுக்கான பதிலை ஆக்‌ஷன் மற்றும் சென்டிமென்ட்டை தூக்கலாகக் கலந்து சொல்வதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் சிக்கந்தர்.

மக்களைப் பாதுகாப்பவராகவும், மனைவி மீது காதல் கொள்பவராகவும், அநீதியைத் தட்டிக் கேட்பவராகவும், மக்களின் நலனுக்காக உருகுபவராகவும் தனது டெம்ப்ளேட் ரியாக்‌ஷன்களால் டீசன்ட்டான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நம் ‘பாய் ஜான்’ சல்மான் கான்.

கணவருக்காகக் காதல் மழையைப் பொழிபவராகவும், அவரைப் பாதுகாக்கத் துடிப்பவராகவும் மிளிர்கிறார் ராஷ்மிகா மந்தனா. ஆனால், ‘தண்ணி கேன் போட வந்தேன் ப்ரோ’ போலச் சட்டெனக் கதையிலிருந்து அவரின் கதாபாத்திரத்தைக் காணாமல் போகச் செய்து வீணடித்திருக்கிறார்கள்.

கதையில் முக்கிய அம்சம் கொண்ட அவரின் கதாபாத்திரத்தை ஓரிரு பாடல்களில் மட்டும் பயன்படுத்தியது ஏமாற்றம்.

Sikandar Movie Review
Sikandar Movie Review

சிறியதொரு கதாபாத்திரத்தில் காஜல் அகர்வாலை நடிக்க வைத்து எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில் அக்கதாபாத்திரத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

டெம்ப்ளேட் அரசியல்வாதி வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னால் இயன்ற அளவுக்கு நல்லதொரு பெர்பாமென்ஸைக் கொடுத்துப் பக்குவமாகக் கொண்டு சென்றிருக்கிறார் சத்யராஜ்.

அமைச்சரின் கைக்கூலியாக வரும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கோபத்தை ஏற்படுத்தி வெறுப்பைச் சம்பாதிக்கும் வகையில் கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் கிஷோர்.

இதனைத் தாண்டி இன்னும் ஒரு டஜன் கதாபாத்திரங்கள் பெரிதளவில் தாக்கத்தை உண்டாக்காமல் கடந்து போகின்றன.

சரியாக எழுதப்படாத அத்தனை காட்சிகளையும் தனது பின்னணி இசையால் தூக்கி நிறத்தைக் கடுமையாகப் போராடி வென்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். தனது முதல் பாலிவுட் திரைப்படம் என்ற பொறுப்புடன் பணிகளைக் கவனித்தது இசையின் தரத்தில் தெரிகிறது. நீங்கதான் வாத்தியாரே உண்மையான சிக்கந்தர்!

இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகத்தில் சாதாரணமாகக் கடந்து செல்கின்றன. சூழலுக்குத் தேவைப்படாத படத்தின் கொண்டாட்டப் பாடல்கள் அனைத்தையும் வலுக்கட்டாயமாக சல்மான் கான் ரசிகர்களை எண்ணத்தில் கொண்டு திணித்திருக்கிறார்கள்.

Sikandar Movie Review
Sikandar Movie Review

ராஜ்கோட் அரண்மனை, மும்பை தாராவி போன்ற அசைந்திடா பகுதிகளுக்கும் உயிர் கொடுத்து வண்ணமயமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் திரு. சண்டைக் காட்சிகளில் தனது லென்ஸ்களால் சல்மான் கானை மாஸாக காட்சிப்படுத்திட பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.

மற்றொரு பக்கம், சண்டைக் காட்சிகளில் வழக்கொழிந்து போன பார்முலாவை பயன்படுத்தியிருப்பது அதிருப்தி! தடம்புரண்டு ஓடும் காட்சிகளைக் கராராகப் பிடித்து வந்து ஒரே நேர் கோட்டில் வைத்துத் தொகுத்துக் கதை சொல்லத் தவறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்.

படத்தின் தொடக்கத்திலேயே நேரடியாகக் கதையின் மோதல் புள்ளிக்குக் கொண்டு சென்ற விதத்தைப் பாராட்டலாம். ஆனால், அந்த மோதல் புள்ளி புதுமை கொண்டதாக இல்லாதது ஆரம்பத்திலேயே நம்மைப் படத்திலிருந்து திசைதிருப்புகிறது.

அதே போல, சல்மான் கானைத் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்களை ஆழமில்லாமல் அமைத்திருப்பது கதைக்குள் நம்மை அழைத்துச் செல்வதற்கு வேகத்தடை போடுகிறது.

இதுவே சஞ்சய், சாய்ஶ்ரீ கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் காதல் உட்படப் பல எமோஷன்களை செயற்கையாகவே நமக்குக் கடத்துகிறது.

மக்களின் செல்வாக்கைக் கொண்ட ஒருவன், அரசியல்வாதியுடன் பகை கொள்ளும் வழக்கமான பார்முலா, பழிவாங்கும் எண்ணம், சென்டிமென்ட் குணம் கொண்ட ஹீரோ எனப் பல திரைப்படங்கள் களமாடிய அதே க்ளிஷே காட்சிகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

Sikandar Movie Review
Sikandar Movie Review

அதுவும் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் மற்ற படங்களின் ஸ்டைலிலேயே அமைத்திருப்பது, மேம்போக்காகக் கையாளப்பட்ட திரைக்கதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

முருகதாஸ் படங்களில் அட்டெண்டென்ஸ் போடும் ஃபேஸ்புக் லைவ் போன்ற விஷயங்கள் ‘நானும் ரெளடி தான்யா’ என வலுக்கட்டாயமாக்கத் திரைக்கதையில் ஏறியிருக்கின்றன.

முக்கியமாக, கதையை ஒரே பாதையில் அமைத்துச் சொல்லாமல் வெவ்வேறு திசைகளுக்குக் கதையைத் திருப்பி தேவைப்படாத இடங்களுக்கெல்லாம் புழுதி பறக்க ரவுண்டு அடித்து நமக்கு டயர்டு உணர்வைக் கொடுக்கிறார்கள்.

இதுவே கதையின் வேகத்தையும், காட்சிகள் கொடுக்கும் தாக்கத்தையும், அனுபவத்தையும் ஜீரோ மீட்டருக்கு கொண்டு சென்றிருக்கிறது.

மோஸ்ட் வாண்டன் கிரிமினல் எனப் போலீஸால் வலைவீசித் தேடப்படும் சஞ்சய் எப்படி தைரியமாகவும், சுதந்திரமாகவும் மும்பையில் சுற்றுகிறார் என்பதெல்லாம் லாஜிக் மீறலின் உச்சக்கட்டம்.

மக்களைப் பாதுகாக்க ஆக்‌ஷன் களத்தில் இறங்கிப் போராடியிருக்கும் இந்த சிக்கந்தர் படத்தைக் காப்பாற்றத் தவறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

crazy slots hunter x hunter